Published : 07 Sep 2020 09:20 AM
Last Updated : 07 Sep 2020 09:20 AM
பெங்களூருவில் போதைப் பொருள் விற்பனை கும்பலுக்கு உடந்தையாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள நடிகை ராகினி திவேதி, கார்த்திக் குமார், அபி போகி ஆகியோருக்கும் பாஜகவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதுதொடர்பாக கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஆதரித்து ராகினி திவேதி பிரச்சாரம் செய்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவுக்கு போதைப் பொருள் கும்பல் வழக்குகள் புதியவை அல்ல. பல ஆண்டுகளாக இந்தக் கும்பலின் செயல்பாடு இருந்தாலும் தற்போதைய பாஜக அரசு தான் இப்பிரச்சினையை தீவிரமாக கையாள்கிறது. இவ்வழக்கில் தொடர்புடையவர் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நடிகை ராகினி திவேதி உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவரை விடுதலை செய்யுமாறு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. ராகினி உள்ளிட்டோருக்கும் பாஜகவினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் பாஜக உறுப்பினர் அல்ல. ஓரிருவர் பாஜக உறுப்பினர் என சொல்லப்படுகிறது. அதுபற்றி எனக்குத் தெரியவில்லை
கடந்த தேர்தலில் பலர் தாமாக முன்வந்து பாஜகவுக்காக பிரச்சாரம் செய்தனர். அவர்களைப் போல ராகினியும் பிரச்சாரம் செய்துள்ளார். இந்த விவகாரம் பற்றி மத்திய குற்றப்பிரிவு போலீஸாருடன் பெங்களூருவில் உள்ள எல்லா காவல் நிலையங்களும் விசாரித்து வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT