Published : 07 Sep 2020 09:15 AM
Last Updated : 07 Sep 2020 09:15 AM
அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து சீன ராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்ட 5 பேரை மீட்கும் பணியில் போலீஸாரும் ராணுவத்தினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தின் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள டபரிஜோ பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை நச்சோ பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு வேட்டையாடச் சென்றுள்ளனர். அவர்கள் ‘டாகின்’ என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்நிலையில், அங்கு வந்த சீன ராணுவத்தினர் சிலர், அவர்களில் 5 பேரை கடத்திச் சென்றதாக தெரிகிறது. மற்ற 2 பேர் சீன ராணுவத்தினரிடம் இருந்து தப்பி ஊர் திரும்பினர். இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்திய ராணுவமும் இதுகுறித்து விசாரித்து வருகிறது.
இந்தச் சூழலில், கடத்தப்பட்ட 5 பேர் தொடர்பாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து சுபன்சிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாரு குஸார் நேற்று கூறும்போது, "5 பேர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர்களின் குடும்பத்தினர் யாரும் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவில்லை. அவர்களின் உறவினர் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவின் அடிப்படையிலேயே இந்த விஷயம் எங்களுக்கு தெரியவந்தது. சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் இடத்துக்கு தனிப்படை போலீஸார் சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் இதுவரை திரும்பவில்லை. அவர்கள் திரும்பிய பின்னரே இந்த விவகாரம் குறித்து முழுமையாக தெரியவரும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT