Published : 06 Sep 2020 07:22 AM
Last Updated : 06 Sep 2020 07:22 AM
மிகவும் பழமை வாய்ந்த நாகரிகமாக கருதப்படும் சிந்து சமவெளி நாகரிகம், வீழ்ச்சி அடைந்ததற்கு பருவ நிலை மாறுபாடு ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
பண்டைய இந்தியாவில் தோன்றிய சிந்து சமவெளி நாகரிகமானது உலகின் மிகப் பழமை வாய்ந்த நாகரிகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள், இந்த நாகரிகமானது சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருக்கலாம் என்று கூறுகிறது.
இந்தோ – ஆரியர்களின் படையெடுப்பு, பூகம்பம் ஆகியவற்றின் காரணமாக இந்த நாகரிகம் வீழ்ச்சி அடைந்ததாக வரலாற்றாசிரியர்கள் இதுவரை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ரோச்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இந்திய விஞ்ஞானி நிஷாந்த் மாலிக் என்பவர் சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையை சமர்ப்பித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சிந்து சமவெளி நாகரிகம் இருந்த தெற்காசியப் பகுதிகளில் உள்ள குகைகளில் ‘ஸ்டேல்காமைட்’ என்ற ஒரு வகை உப்புக் கனிமங்கள் தேங்கியிருந்தன. இதனை பகுப்பாய்வு செய்ததில், அப்பகுதிகளில் கடந்த 5,700 ஆண்டுகளாக பெய்த பருவ மழையின் தரவுகள் கிடைக்கப் பெற்றன.
இதனை வைத்து பார்க்கும் போது, சிந்து சமவெளி நாகரிகம் தோன்றியதற்கு சற்று முன்பு அங்கு நிலவிய பருவ நிலைக்கும், அந்த நாகரிகம் முடிவடைந்த போது அங்கு நிலவிய பருவ நிலைக்கும் மிகப்பெரிய மாறுபாடுகள் இருந்தன. எனவே, சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்ததற்கு பூகம்பம், இந்தோ – ஆரியர் படையெடுப்பு ஆகியவற்றைக் காட்டிலும் பருவ நிலை மாறுபாடே முக்கிய காரணமாக இருந்திருக்கும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கணித முறையின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக விஞ்ஞானி நிஷாந்த் மாலிக் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT