Last Updated : 05 Sep, 2020 01:42 PM

 

Published : 05 Sep 2020 01:42 PM
Last Updated : 05 Sep 2020 01:42 PM

எல்லையில் படைகளைக் குவிப்பதும், அத்துமீறுவதும் சீனாதான்: சீன பாதுகாப்பு அமைச்சரிடம் ராஜ்நாத் சிங் திட்டவட்டம் 

எல்லையில் பதற்றமான சூழ்நிலைகளுக்கு இந்தியாதான் முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்று சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்கி, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கூறியதற்கு பதிலடியாக ராஜ்நாத் சிங்கும் இந்திய இறையாண்மையைவிட்டுக் கொடுக்க முடியாது, சீனாதான் அத்து மீறுகிறது, எல்லையில் படைகளைக் குவித்து ஒப்பந்தங்களை மீறுகிறது என்று வெய் ஃபெங்கியிடம் கூறியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எல்லையில் அதிகளவில் ராணுவத்தை குவிப்பது மற்றும் அத்துமீறலில் ஈடுபட்டு தற்போதைய சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்வது போன்ற சீனாவின் நடவடிக்கைகள், இரு தரப்பு ஒப்பந்தத்தை மீறுவதாகும் என மாஸ்கோவில் சீன பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த போது, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய தலைநகர் சென்றுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று, சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கியைச் சந்தித்து பேசினார். லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறல் காரணமாக பதற்றம் நிலவும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது.

இந்த சந்திப்பின் போது ராஜ்நாத் சிங் கூறியதாக, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எல்லையில் அதிகளவில் ராணுவத்தை குவிப்பது மற்றும் அத்துமீறலில் ஈடுபட்டு தற்போதைய சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்வது போன்ற சீனாவின் நடவடிக்கைகள், இரு தரப்பு ஒப்பந்தத்தை மீறுவதாகும். எல்லை நிர்வாகத்தில் இந்திய படைகள், பொறுப்பான அணுகுமுறையை கையாள்கின்றன.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் நமக்கு உள்ள உறுதியில், எந்த சந்தேகமும் இல்லை. தூதரகம் மற்றும் ராணுவ ரீதியில் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துவதுடன், எல்லையில், முற்றிலுமாக படைகளை வாபஸ் பெறுவதுடன் மற்றும் பதற்றத்தை தணித்து முழுமையான அமைதியை கொண்டு வர வேண்டும்.

இந்திய சீன எல்லையில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவ இரு நாடுகளும் நடவடிக்கை எடுப்பதுடன், கருத்து வேறுபாடுகள், பிரச்னையாக உருவெடுப்பதை இரு நாடுகளும் அனுமதிக்கக்கூடாது. எல்லையில் தற்போதைய சூழலை முறையாக கையாள வேண்டும். எல்லை பிரச்னை இன்னும் பெரிதாகவோ, சிக்கலாகும் வகையிலோ மாற்றக்கூடாது.

இருதரப்பு ஒப்பந்தப்படி,எல்லையில் பாங்காங் ஏரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் படைகளை விரைவாக திரும்ப பெறுவதில், இந்தியாவுடன் இணைந்து சீனா பணியாற்ற வேண்டும்.

இருநாடுகளுமே எல்லையில் சூழ்நிலையை மேலும் பதற்றமடையச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் கூடாது, என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

இருதரப்பும் நிலுவையில் உள்ள பிரச்சினைகள் நடப்பு சூழ்நிலைகள், விவகாரங்களை அமைதியாக உரையாடல் மூலம் தீர்க்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x