Published : 05 Sep 2020 07:07 AM
Last Updated : 05 Sep 2020 07:07 AM
கரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடி பலவற்றை பாதித்திருக்கிறது. ஆனால், 130 கோடி இந்திய மக்களின் ஆசையும் லட்சியமும் எந்தப் பாதிப்பும் அடையாமல் உயிர்ப்போடு இருக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அமெரிக்க - இந்திய உத்திசார் கூட்டு மன்றம் ஏற்பாடு செய்த கானொலி மூலமான கலந்தாய்வு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு பலவற்றை பாதித்திருக்கிறது. ஆனால், அது மக்களுக்குள் இருக்கும் ஆசையையும் லட்சியங்களையும் துளிகூட பாதிக்கவில்லை. அதற்கேற்ற வகையில் பொதுத் துறை மற்றும் தனியார் துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. இந்த வாய்ப்புகள் புதிய முதலீடுகளுக்கு வழி ஏற்படுத்தியுள்ளன.
கடந்த சில மாதங்களில் நெருக்கடி சூழலை சரிசெய்ய தேவையான சீர்திருத்தங்களையும் மேற்கொண்டு வந்திருக்கிறோம். இவை தொழில் செய்வதற்கான சூழலை எளிமைப்படுத்தி இருக்கிறது. அதிகார துஷ்பிரயோகமும் ஆதிக்கமும் குறைக்கப்பட்டிருக்கிறது.
சவால்கள் இல்லாமல் இல்லை. ஆனால், இவற்றைக் கடந்து நல்ல மாற்றங்களை அடைவதற்கான நம்பிக்கையுடன் நாடு இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் 65 சதவீத மக்கள் 35 வயதுக்குக் கீழ் உள்ளனர். துடிப்புள்ள லட்சியவாதிகள் நிறைந்த நாடாக இந்தியா உள்ளது. நிச்சயம் புதிய உச்சங்களை எட்டும். 75-வது சுதந்திர தினத்தை நெருங்கியுள்ள இந்தியாவில் தற்போது அரசியல் சூழல் நிலையாக உள்ளது.
கொள்கைகள் நடைமுறைப்படுத்தலிலும் எந்தவித குறுக்கீடுகளும் இல்லை. இந்தியா ஜனநாயகத்தையும், ஒருமைப்பாட்டையும் கட்டி காப்பதில் ஈடுபாட்டுடன் இருக்கிறது. இந்த கரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காலத்தில் நாட்டின் ஏழை மக்கள் எந்தவித பாதிப்புக்கும் ஆளாகக் கூடாது என்பதில் அரசு மிக கவனமாக இருந்தது. சுயசார்பு பாரதம் என்ற முழக்கம் சர்வதேச சந்தையில் இந்தியாவின் பங்கை அதிகரிப்பதற்கான முயற்சி.
சர்வதேச வர்த்தகத்தின் விநியோக சங்கிலியில் இந்தியா தவிர்க்க முடியாத நாடாகத் திகழ வேண்டும். அதற்கான அத்தனை திறன்களும் இங்கு இருக்கிறது. இந்த நாடு முன்னெடுக்கும் புதிய பயணத்தில் எல்லோரும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT