Published : 08 Sep 2015 09:12 AM
Last Updated : 08 Sep 2015 09:12 AM

ஆந்திராவில் கனமழைக்கு 23 பேர் பலி

ஆந்திராவில் பெய்த கனமழைக்கு ஒரே நாளில் 23 பேர் பலியாகி யுள்ளனர்.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஒடிசா முதல் தமிழக கடலோரப் பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலும் இடி, மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. ஆந்திராவில் கனமழை காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 23 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் விவசாய கூலித் தொழிலாளிகள் என தெரிய வந்துள்ளது.

இடி தாக்கி பலி

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், கொனுகுபெண்டா எனும் கிராமத்தில் வெங்கட சுப்பம்மாள் (49), அவரது மருமகள் வெங்கட ரமணம்மா (28) ஆகிய இருவரும் விவசாய நிலத்தில் பருத்தி சேகரித்து வந்தனர். அப்போது இடி தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதே போன்று இம்மாவட்டத்தில் வேமுலகோட்டா எனும் கிராமத்தில் ஞாயிற்று கிழமை மாலை ஆழ்துளைக் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய பிரதேச மாநிலம் கேதல் பகுதியை சேர்ந்த தொழிலாளி சதீஷ் (23) என்பவர் இடி தாக்கி உயிரிழந்தார். மேலும் சமீரபாளையம் கிராமத்தை சேர்ந்த மாடு மேய்ப்பவரான சங்கரம்மாள் (43), சித்தாரெட்டி பாளையத்தை சேர்ந்த சின்ன ரெட்டி (32) ஆகியோரும் உயிரிழந்தனர்.

நெல்லூர் மாவட்டத்தில் தந்தை யும் மகனும் இடி மழைக்கு பலியாயினர்.

கிருஷ்ணா மாவட்டத்தில் கோக நாராயண பாளையம் பகுதியை சேர்ந்த சிவா (24), பொர்ரபாளையத்தை சேர்ந்த ராஜேஸ்வரி (32), ஜகதீஷ் (35), கிரிபாபு (35) ஆகியோர் இடிதாக்கி உயிரிழந்தனர்.

இதே போன்று நெல்லூர் மாவட்டத்தில் 6 பேரும், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 3 பேரும், குண்டூரில் 4 பேரும், பிரகாசம் மாவட்டத்தில் 6 பேரும், கடப்பா, காகுளம், அனந்தபூர் மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் ஆந்திர மாநிலம் முழுவதும் கடந்த ஞாயிற்று கிழமை ஒரே நாளில் மட்டும் 23 பேர் மழைக்கு பலியாகி உள்ளனர்.

ரூ.4 லட்சம் நிதி உதவி

இது குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தினார். இறந்தவர் களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அறிவித் துள்ளார்.

கிரிக்கெட் மைதானம் சேதம்

குண்டூரில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதில் ஆந்திரா கிரிக்கெட் மைதானத்தில், ஆந்திரா-திரிபுரா மாநில பெண்கள் கிரிக்கெட் அணி விளையாடி கொண்டிருந்தபோதே மிக அருகில் பலத்த இடி இடித்தது. இதில் விளையாட்டு அரங்கம் சிறிது சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது.

நேற்றும் ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x