Published : 17 Sep 2015 12:22 PM
Last Updated : 17 Sep 2015 12:22 PM
2015-ம் ஆண்டு நிறைவடைய வேண்டிய புத்தாயிரமாண்டு வளர்ச்சி இலக்குகளில் இந்தியா கடுமையாக பின் தங்கியுள்ளது என்று அந்தத் துறையைச் சார்ந்த நிபுணர்கள் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்தனர்.
ஏன் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏகப்பட்ட ஓட்டைகள் உள்ளன? நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து பலதரப்புகளிலிருந்தும் பெருமிதம் ததும்பும் கூற்றுக்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் சமூக நலத்திட்டங்களில் ஏன் பின் தங்கியுள்ளது? என்று நிபுணர்களிடம் தி இந்து (ஆங்கிலம்) கேட்டறிந்தது.
முன்னாள் திட்டக் கமிஷன் செயலர் என்.சி.சக்சேனாவை அணுகிய போது, முக்கியமாக உணவு தொடர்பான திட்டங்கள் குறிப்பாக பொதுவிநியோக முறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவைகள் ஆகியவற்றில் கடும் ஊழல்கள் நிரம்பியுள்ளன என்றும், பல்வேறு தவறுகள், பொறுப்பின்மை ஆகியவை காரணமாக இத்திட்டங்கள் சரியாக நடைமுறைப் படுத்தப்படுவதில்லை என்றார்.
மேலும், இத்தகைய சமூக நலத்திட்டங்கள் குறிப்பிட்ட இலக்கற்று நடப்பதால், யாருக்கு இத்திட்டங்களின் பயன்கள் சென்று சேர வேண்டுமோ அவர்களுக்குப் போய் சேருவதில்லை. குறிப்பாக, நகரங்களுக்கு புலம் பெயர்ந்தோர், தெரு மற்றும் குடிசைவாசிகள், முறைசாரா கூலித் தொழிலாளர்கள் ஆகியோர் இத்திட்டங்களினால் பயனடைவதில்லை என்றார்.
ஐ.நா. மக்கள் தொகை நிதியத்தின் உதவி பிரதிநிதியான வெங்கடேஷ் ஸ்ரீநிவாசன் கூறும்போது, குழந்தைப் பேறின் போது தாயார்கள் மரணமடையும் விகிதக்குறைப்பில் இந்தியா இன்னும் இலக்குக்கு அருகில் கூட இல்லை. ஏனெனில் நீண்ட காலமாக இந்திய அரசுகள் குடும்பக் கட்டுப்பாடு பற்றியே கவலைப் பட்டுக் கொண்டிருந்தது. மகப்பேறு மருத்துவ அக்கறையில் கவனம் 2005-க்குப் பிறகே வந்துள்ளது. அதாவது ஜனனி சுரக்ஷா யோசனா மூலம் கட்டாய பண உதவித் திட்டங்கள் மூலம் கவனம் பெற்றது.
“160 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டதில் மகப்பேறின் போது தாய்மார்களின் மரண விகிதம் அதிகமாக இருப்பதே தெரியவந்துள்ளது. சமூக நல மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சை மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. உள்ளூர் அரசு மருத்துவமனைகளின் திறனை கடுமையாக உயர்த்த வேண்டிய தேவை இருக்கிறது” என்றார் அவர்.
தரவுக் குறைபாடு:
மாநில அரசுகள் இத்தகைய புள்ளிவிவரங்களை சரியாக பராமரிக்காததால் சமூக நலத் திட்டங்களில் மேம்பாடு என்பதை திறம்பட கண்காணிக்க முடியவில்லை மேலும் யாரைப் பொறுப்பாக்குவது என்பதும் அர்த்தமற்றதாகி விடுகிறது என்று சக்சேனா கூறுகிறார்.
புறவயமான மதிப்பீடுகளின் படி 43.5% குழந்தைகள் எடைகுறைவாக உள்ளனர். இந்த 43.5% குழந்தைகளில் 17% குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுடையவர்கள். ஆனால் மாநில அரசுகளின் தரவுகளின் படி 13% குழந்தைகள் எடைகுறைவானவர்கள் என்றும், 0.4% குழந்தைகளே கடுமையான ஊட்டச் சத்துக் குறைபாடுடையவர்கள் என்றும் இந்திய மானுட வளர்ச்சி அறிக்கை, 2011 கூறியுள்ளது. "இத்தகைய தவறான தரவுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஒருவரிடம் கேட்டபோது, அவர் என்னிடம் கூறினார், ‘சரியான தரவுகளை அளிப்பது பெரிய பிரச்சினையானது’ என்றார்.
வளரும் நாடுகளுக்கான ஆய்வு மற்றும் தகவல்கள் அமைப்பின் தலைமை இயக்குநர் சச்சின் சதுர்வேதி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் தெரிவிக்கும் போது, “அரசு தரவு சேகரிப்புகளின் சீரற்ற தன்மையினால் வளர்ச்சி குறியீடுகள் பற்றி அறிக்கை தயாரிப்பதை பெரிய சவாலாக்கி விடுவதோடு, இந்த மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் ஐ.நா.பொதுப்பேரவைக் கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் என்ற ஒன்று ஏற்றுக் கொள்ளப்படவிருப்பதும் சவாலாக உள்ளது.
நீடித்த வளர்ச்சி இலக்குகளில் சமத்துவமின்மை போன்ற விவகாரங்களில் புதிய தரவுகளைச் சேர்க்கப்படவுள்ள நிலையில், இந்திய தரவு ஒழுங்கமைப்புகள் அதன் முக்கிய பரிமாணங்களைச் சந்திக்க முடியாத நிலையில் இருக்கும். உதாரணமாக குழந்தைகள் மரண விகிதத்தில் அதிகாரபூர்வ அறிக்கை இந்தியா இலக்கை எட்டுவதற்கு அருகில் இருக்கிறது என்று கூறுகிறது, ஆனால் லான்செட் அறிக்கையோ 1000-த்தில் 49 மரணம் என்று கூறுகிறது, உண்மையில் இலக்கு 42 என்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.
'தரவுகளின் அரசியல்' காலக்கட்டத்தில் நாம் இருப்பதை நிபுணர்களின் இத்தகைய கருத்துகள் பிரதிபலிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT