Published : 04 Sep 2020 02:56 PM
Last Updated : 04 Sep 2020 02:56 PM
நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இடம் பெறாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 14-ம் தேதி தொடங்கி வார விடுமுறையின்றி, அக்டோபர் 1-ம் தேதிவரை நடக்கிறது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் இரு அவைகளும் இயங்கும்.
கரோனா வைரஸ் சூழலைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடக்கும். கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இல்லை. தனிநபர் மசோதாவும் இல்லை.
கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரமும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும் என்று மக்களவை, மாநிலங்களவைச் செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேள்வி நேரத்தை ரத்து செய்வது ஜனநாயகத்திற்கும் அரசியல் சட்டத்திற்கும் எதிரானது என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. எனினும் நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இடம் பெறாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது:
நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரை கரோனா சூழலில் நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் பல்வேறு கட்சித் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
கேள்வி நேரத்தை ரத்து செய்ய பெரும்பாலான கட்சிகள் ஒப்புக் கொண்டுள்ளன. எனவே அதன்படி கேள்வி நேரம் ரத்து செய்யப்படும். அதேசமயம் பூஜ்ய நேரம் மட்டும் இருக்கும். இந்த நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கியமான கேள்விகளை முன் அனுமதி பெற்று கேட்கலாம்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT