Published : 04 Sep 2020 09:06 AM
Last Updated : 04 Sep 2020 09:06 AM
‘ரோஹிங்கிய முஸ்லிம்களை சுட்டுத்தள்ள வேண்டும்’ என்று பேஸ்புக்கில் பதிவிட்டு படுமோசமான வெறுப்புணர்வை வெளிப்படுத்திய தெலங்கானா பாஜக எம்.எல்.ஏ. ராஜாசிங் (42) என்பவருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் தடை விதித்துள்ளது.
இதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து மத வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாகவும் மதக்கலவரத்தை தூண்டும் விதமாகவும் கருத்துகளைப் பதிவிட்டு வந்தார் என்ற புகார்கள் குவிந்தன.
சமீபத்தில் அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் இந்தியாவில் பேஸ்புக் பக்கங்களில் பாஜக தலைவர்கள் வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாக பதிவிடுகின்றனர், இதை ஃபேஸ்புக் நிறுவனம் கண்டுகொள்வதில்லை என்று எழுதியிருந்தது.
இது பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியதில் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் சரமாரியாக ஃபேஸ்புக் மீதும் பாஜக மீதும் குற்றச்சாட்டுகளை எழுப்பின, பதிலுக்கு ராகுல் காந்தியை பாஜக தாக்கிப் பேசியது.
இதனையடுத்து தகவல் தொழில்நுட்பத்துறைக்கான நாடாளுமன்றக் குழு பேஸ்புக் இந்தியா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பியது.
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மோடி குறித்த அவதூறுகளையும் பேஸ்புக் கண்டுகொள்வதில்லை என்று எதிர்க்குற்றச்சாட்டு எழுப்பினார்.
இந்நிலையில்தான் ரோஹிங்கியர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற ராஜாசிங் எம்.எல்.ஏ.வுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் தடை விதித்துள்ளது, இன்ஸ்டாகிராம் பக்கமும் நீக்கப்பட்டுள்ளது. இனி இவர் கருத்துகளையோ புகைப்படங்களையோ பதிவிட முடியாது.
இது குறித்து ராஜா சிங் கூறும்போது, “எனக்கு அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அதிகாரப்பூர்வமான பக்கமும் இல்லை. என் பெயரில் என் ஆதரவாளர்கள் உருவாக்கியப் பக்கத்துக்கு பேஸ்புக் நிறுவனம் தடை விதித்துள்ளதாக அறிகிறேன். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் வெறுப்புணர்வை தூண்டும் கருத்துகளை பதிவிடுகிறார் எனவே அவர் பக்கத்துக்கும் தடை விதிக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT