Published : 04 Sep 2020 08:58 AM
Last Updated : 04 Sep 2020 08:58 AM
எல்லையில் சீன ராணுவத்தின் அத்துமீறலை ஒடுக்க, எஸ்எப்எப் எனப்படும் சிறப்பு திறன் படைத்த உளவுப் படை களமிறக்கப்பட்டுள்ளது. இந்தப் படையின் கண்காணிப் பால்தான், லடாக்கில் 3 மலை முகடுகளை சீன ஆக்கிரமிப்பில் இருந்து இந்திய ராணுவம் மீட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு லடாக்கில் கடந்த மே மாத தொடக்கத்தில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அதன்பின் ஜூன் 15-ம் தேதி இருதரப்புக்கும் மிகப்பெரிய மோதல் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதன்பின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு எல்லையில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்கு சீன ராணுவம் பின்வாங்கியது.
ஆனால், சுமார் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு லடாக்கின் பான்காங் ஏரியின் தெற்கு கரை பகுதியில் கடந்த சனிக்கிழமை (29-ம் தேதி) நள்ளிரவு 500 சீன வீரர்கள் மீண்டும் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தி பின்வாங்க செய்தனர். பான்காங் ஏரியின் தெற்கு கரை பகுதியில் 3 மலை முகடுகளை சீனா சொந்தம் கொண்டாடுகிறது. அந்தப் பகுதியில் சீன ராணுவம் புதிதாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியது. ஆனால், இந்திய வீரர்கள் 3 மலைகளை கைப்பற்றி கேம ராக்களை பிடுங்கி எறிந்தனர்.
இந்த துணிச்சலான நடவடிக்கைக்குப் பின்னால், ‘எஸ்டாபிளிஸ்மென்ட் 22’ அல்லது ‘ஸ்பெஷல் பிரான்டியர் போர்ஸ்’ அல்லது எஸ்எப்எப் எனப்படும் சிறப்பு உளவுப் படை இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தப் படை கேபினட் செகரட்டரியேட் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. இந்தப் படை கிழக்கு லடாக் பகுதியில் களமிறங்கி இருப்பதை ராணுவ மூத்த அதிகாரிகள் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால், ராணுவத்துடன் இந்தப் படையினர் அவ்வளவாக தொடர்பில் இருப்பதில்லை என்கின்றனர். ராணுவத்தில் இல்லாத சிறப்புப் படை இது.
62-ல் உருவானது
கடந்த 1962-ம் ஆண்டு இந்திய - சீன போருக்குப் பின்னர் இந்த எஸ்எப்எப் சிறப்பு படை உருவாக்கப்பட்டது. திபெத்தில் இருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்து நிரந்தரமாக தங்கிவிட்ட இளைஞர்களைக் கொண்டு இந்தப் படை உருவாக்கப்பட்டது. திபெத்தையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இவர்களுக்கு புலனாய்வுப் பிரிவு, ரா உளவுப் பிரிவு மற்றும் சிஐஏ ஆகியவை கடுமையான பயிற்சி அளித்துள்ளன. எல்லையில் எதிரிகளின் நடமாட்டம், சதி திட்டம் ஆகியவற்றை கண்டறிந்து முறியடிப்பதுதான் இவர்கள் பணி. 2-ம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் - இந்திய ராணுவத்தில் 22-வது மலைப்பகுதி ரெஜி மென்ட்டுக்கு தலைமையேற்றிருந்த சுஜன் சிங் உபன் என்பவர் தான், எஸ்எப்எப் படையை உருவாக்கினார். இதன் தலைமை அலுவலகம் உத்தராகண்ட் மாநிலம் சக்ரதா என்ற இடத்தில் உள்ளது. இந்தப் படை உருவானப் பின்னர் சில பத்தாண்டுகள், சீனா அணு ஆயுதங்களை எங்கெங்கு நிலைநிறுத்துகிறது என்பதை கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
சுஜன் சிங் தலைமையேற்றிருந்த 22-வது படைப் பிரிவின் பெயரிலேயே இதற்கு ‘எஸ்டாபி ளிஸ்மென்ட் 22’ என்ற செல்லப் பெயரும் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படையில் 5 பட்டாலியன் அல்லது 5,000 கமாண்டோக்கள் உள்ளனர். இவர்கள் சாதாரண ராணுவ வீரர்கள் அல்ல. முழு உடல் திறன் படைத்தவர்கள். வழக்கமாக உயரம் செல்ல செல்ல மூச்சு விடுவதில் அதிக சிரமம் ஏற்படும். கடும் பனி, உயர்ந்த மலைமுகடுகள் போன்ற அசாதாரணமான இடங்களில் கிலோ கணக்கில் ஆயுதங்கள், அதிக எடையுள்ள பாதுகாப்பு கவச உடைகளுடன் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால், உலகிலேயே பனிப்படர்ந்த உயர்ந்த மலைகளில் சிறப்பாக செயல்படும் ஒரே ராணுவம், இந்திய ராணுவம் தான்.
அதிலும், இந்த எஸ்எப்எப் படை ஒருபடி மேல். லடாக் போன்ற பகுதிகளில் சீன வீரர்கள் மலையேறும்போது, மூச்சுவிட முடியாமல் திணறுவது தெரிய வந்துள்ளது. அதனால் இந்திய பகுதிகளை அவர்களால் நினைத்தபடி ஆக்கிரமிக்க முடிவதில்லை. ஆனால், எஸ்எப்எப் படையில் உள்ள கமாண்டோக்கள், 16 ஆயிரம் அடி உயரத்தில் வாலிபால் விளையாடும் அளவுக்கு உடல் திறன் படைத்தவர்கள். அவர்கள் திபெத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால் இயற்கையாகவே அவர்களது உடல் அதற்கு ஒத்துழைக்கிறது. இந்தப் படையினர் குறித்து இதுவரை பெரிதாக வெளியில் தெரிய வந்ததில்லை. தற்போது பாங்காங் ஏரிப் பகுதியில் இவர்களது திறமை வெளிப்பட்ட பிறகு தற்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT