Published : 04 Sep 2020 08:40 AM
Last Updated : 04 Sep 2020 08:40 AM
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்துசெய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகிளம்பி உள்ளது. இதை சமாளிக்கும் வகையில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க சம்மதித்திருப்பது தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கரோனா பரவல் காரணமாக கூட்டப்படாமல் இருந்தது. இந்நிலையில், கரோனா மீதான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 14-ம் தேதி தொடங்கி 15 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி யான போது அதில் கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால், 1950-ம் ஆண்டு முதல் தொடர்ந்து வந்த கேள்வி நேரத்தை கரோனா வைரஸை காரணம் காட்டி ரத்து செய்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு, மக்கள் பிரச்சினையை எழுப்பும் எதிர்க்கட்சிகளின் குரல்வளையை மத்திய அரசு நசுக்க முயற்சிப்பதாகவும் புகார் கிளம்பி உள்ளது. இதுகுறித்து நேற்று ஆலோசனை நடத்திய மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை, எம்.பி.க்களின்கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வ மாக பதில் அளிக்க முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சக வட்டாரம் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, ‘‘இந்தக் கூட்டம்நடத்துவது தொடர்பாக ஆலோசனை கேட்டபோது கேள்வி நேரத்தை ரத்து செய்ய ஒப்புக்கொண்ட எதிர்க்கட்சியினர் இப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதனால், தொடர்புடைய துறைஅதிகாரிகளை நாடாளுமன்றத்திற்கு வரவழைக்க வேண்டி இருக்கும். இதில், கரோனா பாதுகாப்பு நடவடிக்கை பிரச்சினை உள்ளது. திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரியன் தவிர மற்ற அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இதன் பிறகுஅவர்கள் மீண்டும் கிளப்பும் பிரச்சினையால் எழுத்துமூலம் பதில் அளிக்க முடிவு செய்துள்ளோம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்’’ என்றனர்.
வழக்கமாகவே, நாடாளுமன் றத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் இந்த எழுத்துப்பூர்வ பதில்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. மழைக்கால கூட்டத்தொடரிலும் தொடர உள்ளமைக்காக, ஒவ்வொரு எம்.பி.யும் நாள் ஒன்றுக்குஐந்து கேள்விகளை எழுப்பலாம்.அவற்றில் மொத்தமாக 210கேள்விகள் மட்டும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். பிறகு இதற்கான எழுத்துபூர்வ பதில்கள் அன்றாடம் சமர்ப்பிக் கப்பட உள்ளது.
இந்த முறையிலான பதில்களில்எழும் சந்தேகங்களுக்கு எம்.பி.க்கள் தொடர்புடைய துறைகளின் அமைச்சர்களிடம் கேட்க முடியாத நிலை உள்ளது. எனினும், இதற்கான கேள்விகளை எம்.பி.க்கள் 15 நாட்களுக்கு முன்னதாக நாடாளுமன்ற அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. இந்தஎழுத்துப்பூர்வ கேள்விகளுக்காக தனியாக நேரம் ஒதுக்க தேவையில்லை என்பதால் அதனை மத்திய அரசு அனுமதிப்பதாகக் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT