Published : 04 Sep 2020 08:29 AM
Last Updated : 04 Sep 2020 08:29 AM
ரயில்வே வாரியத்தை சீரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரயில்வே வாரியத்துக்கு முதல் முறையாக தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) நியமிக்கப்பட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக பின்பற்றப் படும் செயல்பாட்டு முறைகளை மாற்றி அமைக்க ரயில்வே வாரியத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்திய ரயில்வேயின் செயல்பாடுகளை சீரமைக்க கடந்தஆண்டு டிசம்பரில் மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. இதன் விளைவாக ரயில்வே வாரியத்தின் தலைமைப் பொறுப்புகள் மாற்றிய மைக்கப்பட்டு முதல் முறையாக வாரியத்துக்கு தலைமைச் செயல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ரயில்வே வாரியத்தின் தலைவராக இருந்த வி.கே. யாதவ் தற்போது வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். வாரியத்தில் 4 உறுப்பினர்கள் இடம்பெறுவர். வாரியத்தின் சிக்னல் மற்றும் டெலிகாம் பிரிவின் உறுப்பினர் பிரதீப் குமார் புதிதாக மாற்றியமைக்கப்பட்ட வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கட்டமைப்பு துறைக்கு பொறுப்பு வகிப்பார். இப்பிரிவானது ரயில்வே தண்டவாளம் மற்றும் ரயில்வேக்கு சொந்தமான சொத்துகளை நிர்வகிக்கும் பிரிவாகும்.
போக்குவரத்து பிரிவின் உறுப்பினராக இருந்த பி.எஸ்.மிஸ்ரா தற்போது செயல்பாடு மற்றும் வர்த்தக மேம்பாட்டு பிரிவின்உறுப்பினராக நியமிக்கப்பட்டுள் ளார். அதேபோல டிராக் ஷன் பிரிவின் உறுப்பினராயிருந்த ராஜேஷ்திவாரி இனி டிராக் ஷன் மற்றும்அன்றாட இருப்பு பிரிவின் உறுப்பினராயிருப்பார். ஏற்கெனவே இப்பிரிவில் உறுப்பினராக உள்ள பி.சி.சர்மா, இம்மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். அதன் பிறகு இப்பிரிவு பொறுப்புகளை அவர் ஏற்பார். அதுவரையில் சிறப்புப் பணி அலுவலராக திவாரி தொடர்வார். நிதி ஆணையராக இருந்தமஞ்சுளா ரங்கராஜன் இனி நிதித்துறை உறுப்பினராக வாரியத்தில் தொடர்வார்.
வாரியத்தில் பின்பற்றப்பட்டு வந்த பழமையான செயல்முறைகளை மாற்றி, மாறி வரும் காலத்துக்கேற்ப போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில் வாரியத்தின் செயல்பாடுகள் அமைய உள்ளது. இந்த மாற்றம் ரயில்வே வாரிய செயல்பாடுகளில் மிக முக்கியமான முன்னேற்றத்தை காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மனிதவள பிரிவின் இயக்குநராக அதே பதவிபொறுப்பில் ஆனந்த் எஸ்.காத்திதொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய வாரிய பொறுப்புகளில் இருந்த உறுப்பினர்கள் பணியாளர், பாகங்கள் நிர்வாகம், பொறியியல் பிரிவு உள்ளிட்டவற்றைச் சேர்ந்தவர்கள் தங்களது பொறுப்புகளை புதிய வாரிய உறுப்பினர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என அமைச்சரவை வெளியிட்ட வழிகாட்டு முறை தெரிவிக்கிறது.
இந்திய ரயில்வே மேலாண்மை சேவை (ஐஆர்எம்எஸ்) துறையை உள்ளடக்கிய 8 சேவை பிரிவு களிலும் சீர்திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT