Published : 03 Sep 2020 08:52 AM
Last Updated : 03 Sep 2020 08:52 AM

பிரதமர் மோடியின் இணையதள கணக்கை ஹேக்கர்கள் முடக்கியதால் பரபரப்பு:விசாரணை நடைபெறுவதாக ட்விட்டர் நிர்வாகம் விளக்கம்

புதுடெல்லி

பிரதமர் மோடியின் தனிப்பட்ட இணையதள ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் உலகின் பல்வேறு பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன. இதில் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடன், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பிரபல கோடீஸ்வரர் எலன் மாஸ்க் உள்ளிட்டோர் அடங்குவர். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் தனிப்பட்ட இணையதளத்திற்கான ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.

அவரது தனிப்பட்ட இணையதளத்திற்கான @narendramodi_in என்ற ட்விட்டர் கணக்கு செயல்பட்டு வருகிறது. இதனை 25 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் சிலர் முடக்கியுள்ளனர். இதையடுத்து தொடர்ச்சியான பல்வேறு பதிவுகளை இட்டனர்.

அதில் கோவிட்-19 பாதிப்பிற்கான பிரதமரின் தேசிய நிவாரண நிதியத்திற்கு அனைவரும் நிதியுதவி செலுத்துங்கள். இந்தியாவில் தற்போது கிரிப்டோ கரன்சி முறை பரவலாக தொடங்கியிருக்கிறது. எனவே பிட்காயின் மூலம் நிதியுதவி செலுத்துங்கள் என்று கூறி குறிப்பிட்ட குறியீடும் பதிவிடப்பட்டிருந்தது.

இதுபற்றி தகவலறிந்த ட்விட்டர் நிறுவனம் உடனே மீட்பு நடவடிக்கையில் இறங்கியது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ட்விட்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக இ-மெயில் வாயிலாக ட்விட்டர் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் ‘‘பிரதமர் மோடியின் தனிப்பட்ட இணையதளத்திற்கான (https://www.narendramodi.in/) ட்விட்டர் கணக்கை முழுவதுமாக மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். வேறு ஏதேனும் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கிறதா என விசாரணை நடைபெறுகிறது. மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கிற்கும், பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் கணக்கிற்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.’’ எனத் தெரிவித்துள்ளார்.

எனினும் இதுதொடர்பாக பிரதமர் அலுவலகமோ அல்லது அவரது தரப்பிலோ எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x