Published : 02 Sep 2020 02:00 PM
Last Updated : 02 Sep 2020 02:00 PM
வரும் 14-ம் தேதி தொடங்க இருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இல்லை. தனிநபர் மசோதாவும் இல்லை. கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரமும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும் என்று மக்களவை, மாநிலங்களவைச் செயலாளர்கள் இன்று அறிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 14-ம் தேதி தேதி தொடங்கி, அக்டோபர் 1-ம் தேதிவரை விடுமுறையில்லாமல் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
கரோனா வைரஸ் பரவலுக்கு இடையே இந்தக் கூட்டத்தொடர் நடப்பதால், பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது.
72 மணிநேரத்துக்கு முன்பே எம்.பி.க்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்தபின் அவைக்கு வர வேண்டும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், சமூக விலகலைப் பின்பற்றி இருக்கைகள் மாற்றப்பட்டுள்ளன. முகக்கவசம், கையுறை, சானிடைசர், ஃபேஸ்ஷீல்ட் போன்றவை எம்.பி.க்களுக்கு வழங்கப்பட உள்ளன.
இந்நிலையில், கரோனா காலத்திலும் செயல்படும் மழைக்காலக் கூட்டத் தொடர் குறித்து மக்களவை, மாநிலங்களவைச் செயலாளர்கள் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 14-ம் தேதி தொடங்கி வார விடுமுறையின்றி, அக்டோபர் 1-ம் தேதிவரை நடக்கிறது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் இரு அவைகளும் இயங்கும்.
கரோனா வைரஸ் சூழலைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடக்கும்.
இதன்படி காலை ஷிப்ட்டில் மாநிலங்களவை இயங்கும், மாலை ஷிப்ட்டில் மக்களவை இயங்க உள்ளது. அதாவது காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணிவரை மாநிலங்களவை செயல்படும். மாலை 3 மணிமுதல் இரவு 7 மணி வரை மக்களவை செயல்படும்.
கூட்டத்தில் கேள்வி நேரம் ரத்து செய்யப்படுகிறது. கரோனா வைரஸ் சூழல் குறித்து மத்திய அரசு கேட்டுக்கொண்டதற்கினங்க, தனிநபர் மசோதா தாக்கலும் கூட்டத்தொடரில் இல்லை''.
இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டது குறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.டெரீக் ஓ பிரையன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “கரோனாவைக் காரணம் காட்டி, ஜனநாயகத்தைக் கொலை செய்கிறார்கள். மத்திய அரசைக் கேள்வி கேட்கும் உரிமையைக் கூட எதிர்க்கட்சிகள் இழக்கிறார்கள்.
சிறப்பு அமர்வு கூட்டப்படும்போது கேள்வி நேரம் ரத்து செய்யப்படும். ஆனால், வரக்கூடிய கூட்டத்தொடர் வழக்கமான கூட்டத்தொடர். அதிலும் கேள்வி நேரம் இல்லை.
1950-களில் இருந்து நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் இருந்து வருகிறது. முதல் முறையாக ரத்து செய்யப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு இது தொடர்பாகக் கடிதம் எழுதியிருந்தார்.
அதில், “மழைக்காலக் கூட்டத்தொடரில் எம்.பி.க்களின் கேள்வி நேரம், கேள்விநேரத்துக்குப் பிந்தைய நேரத்தை குறைத்துவிடக்கூடாது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களை எம்.பி.க்கள் எழுப்பி பேசமுடியாத சூழல் ஏற்படும்” எனத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT