Published : 02 Sep 2020 01:24 PM
Last Updated : 02 Sep 2020 01:24 PM

புலம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்கள் போல் இருக்கிறோம்: பாஜகவுக்குத் தாவிய சிந்தியா, முன்னாள் காங்கிரஸாரால் பாஜகவில் எழும் உட்கட்சி அதிருப்திகள்

காங்கிரஸிலிருந்து வெளியேறி 23 எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவில் இணைந்த, ம.பி. ஆட்சிக்கவிழ்ப்புக்குக் காரணமான ஜோதிர் ஆதித்ய சிந்தியா மீது பாஜகவில் ஏற்கெனவே இருக்கும் சில மூத்தோர்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் இவர்கல் விட்டுச் சென்ற 22 தொகுதிகள் உட்பட 24 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருவதால் சிந்தியா அதில் மிகவும் சுறுசுறுப்படைந்துள்ளார். இதில் காங்கிரஸ் கட்சியை நிர்கதியாக்கி விட்டு வந்த 22 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் களம் காண்கின்றனர்.

இந்தூர், குவாலியர் பகுதிகளுக்கு சிந்தியா கடந்த மாதம் வருகை தந்தார். இந்தூரில் பாஜக தலைவர்களை, தொண்டர்களை தங்களுக்காக பணியாற்ற வேண்டி அவர் கேட்டுக் கொள்ள இந்த இரண்டு ஊர்களுக்கு சிந்தியா பயணம் மேற்கொண்டார். ஆனால் இந்தூர், குவாலியரில் ஏற்கெனவே இருக்கும் பாஜகவினருக்கு சிந்தியாவை பிடிக்கவில்லை, அவரது வேட்பாளர்களுக்கு தாங்கள் பணியாற்ற வேண்டுமா என்ற அதிருப்தி நிலவுவதாக அங்குள்ள அரசியல் பார்வையாளர்கள் ஆங்கில ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்துள்ளனர்.

24 இடைத்தேர்தல் தொகுதிகளில் 16 தொகுதிகள் குவாலியர்-சம்பலில் உள்ளது, இங்கு சிந்தியாவுக்கு பெரிய செல்வாக்கு உள்ளது.

தன் சொந்த ஊரான குவாலியரிலேயே சிந்தியாவுகு எதிரி உள்ளார், அவர் பாஜகவைச் சேர்ந்த மூத்த நபர் ஆவார். முன்னாள் எம்.பியும் சிந்தியா குடும்பத்தின் நீண்ட கால வைரியுமான ஜைபன் சிங் பவையா இங்குதான் இருக்கிறார். இவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா மட்டுமல்ல அவரது தந்தை மாதவராவ் சிந்தியாவுக்கு எதிராகவும் போட்டியிட்டவர்.

ஜைபன் சிங் பவையா சமீபத்தில் சூசகமாக சிந்தியாவை நோக்கிய ட்வீட் ஒன்றில், “பாம்புக்கு இரட்டை நாக்கு, மனிதருக்கு ஒன்று. அதிர்ஷ்டவசமாக நாம் மனிதர்கள். அரசியலில் காலத்துக்கு ஏற்ப நண்பர்களையும் மாற்றிக் கொள்ளலாம், ஆனால் என்னைப் பொறுத்தவரை இப்போதும் கூட கொள்கை மிக முக்கியம்” என்று இந்தியில் ட்வீட் செய்திருந்தார்.

இப்படியிருக்கையில் சிந்தியாவின் 22 வேட்பாளர்களுக்கு உதவ பாஜக அமைத்த குழுவில் பவையாவும் ஒரு உறுப்பினர் ஆவார். ஆனால் இவர் பிரச்சாரம் செய்யவே இல்லை என்கிறது குவாலியர் பாஜக வட்டாரம். ஏன் என்றால் இவர் பிரச்சாரம் செய்ய வேண்டியது தற்போதைய ம.பி.அமைச்சரவையில் எரிசக்தி அமைச்சராக இருக்கும் பிரதுமன் சிங் தோமருக்கு. 2018 சட்ட மன்றத் தேர்தலில் இதே தோமர்தான் பவையாவை தோற்கடித்திருந்தார். பவையா மாநிலத்தின் கல்வி அமைச்சராக இருந்தவர், மேலும் தோமர், பவையாவை ஒருமுறை ’மேக் அப் மினிஸ்டர்’ என்று கிண்டல் செய்திருந்தார், காரணம் உடைக்கு ஏற்ற ஷூ அணிவது பவையாவின் வழக்கமாம்.

சிந்தியாவுடன் வந்த வேட்பாளர்களின் வெற்றி பாஜக ஆட்சியைத் தக்க வைக்க அவசியமானதாகும். இவரோடு மட்டுமல்லாமல் பிரபாத் ஜா, மாயா சிங், கவுரி ஷங்கர் ஷேஜ்வார் போன்ற சிந்தியா விமர்சகர்களும் இந்த இடைத்தேர்தலில் பாஜக அமைத்த குழுவில் இருக்கின்றனர். இவர்களுக்கும் பாஜக மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இவர்கள் மட்டுமல்ல ம.பி.யின் முதல் பாஜக முதலமைச்சர் கைலாஷ் ஜோஷியின் மகன் தீபக் ஜோஷி, மனோஜ் சவுத்ரி என்ற சிந்தியா விசுவாசிக்கு பிரச்சாரம் செய்யாமல் இருந்து வருகிறார்.

தீபக் ஜோஷி தி பிரிண்ட் ஆங்கில ஊடகத்துக்குத் தெரிவிக்கும் போது, “எங்கள் சூழ்நிலை காஷ்மீர் பண்டிட்கள் போல் உள்ளது. அவர்கள் சொந்த நாட்டிலேயே புலம் பெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். எங்கள் கட்சியிலேயே நாங்கள் ஒதுக்கப்பட்டுள்ளோம். புதுமாப்பிள்ளையை வரவேற்கலாம் கொண்டாடலாம் ஆனால் அதில் பழைய மாப்பிள்ளைகளை புறக்கணிக்கக் கூடாது. நாங்கள் முதல்வரைச் சந்தித்தோம் ஆனால் எங்கள் அதிருப்திக்கு பதில் இல்லை. எங்கள் கவுரவும் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

முன்னாள் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட தாங்கள் ஒதுக்கப்பட்டதாகக் கருதுகின்றனர். கட்சித் தலைவர் சில உத்தரவாதங்களைத் தருகிறார், ஆனால் அவர்கள் இதயத்திலும் பல காயங்கள் உள்ளன” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x