Published : 02 Sep 2020 01:14 PM
Last Updated : 02 Sep 2020 01:14 PM

பிஎம் கேர்ஸ் நிதிக்கு 5 நாட்களில் ரூ.3,076 கோடி நிதி; நன்கொடையாளர்கள் பெயரை வெளியிடுங்கள்: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் : கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் தாக்கத்தைச் சமாளிக்க உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் அறக்கட்டளைக்கு 5 நாட்களில் ரூ.3,076 கோடி நிதி வந்துள்ளதாக, தணிக்கையாளர் அறிக்கை தெரிவிக்கிறது. அந்த நன்கொடையாளர்கள் பெயரை வெளியிடுங்கள் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா வைரஸ் நாட்டில் தீவிரமாகப் பரவத் தொடங்கியபோது பிரதம அமைச்சரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிதி (பிஎம் கேர்ஸ்) அறக்கட்டளையை பிரதமர் மோடி கடந்த மார்ச் 27-ம் தேதி உருவாக்கினார்.

இதில் பிரதமர் மோடி தலைவராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

இந்த பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையில் உள்ள நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்ககல் செய்யப்பட்ட மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இந்நிலையில், பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை குறித்த தணிக்கை அறிக்கை, பிஎம் கேர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை உருவாக்கப்பட்ட மார்ச் 27-ம் தேதி முதல் 31-ம் தேதிக்குள் ரூ.3,076 கோடி பணம் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது.

இதில் ரூ,3,075.85 கோடி உள்நாட்டிலிருந்தும், ரூ.39.67 லட்சம் வெளிநாட்டிலிருந்தும் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், யாரெல்லாம் இந்த 5 நாட்களில் நன்கொடை அளித்தார்கள், அந்த வெளிநாட்டு, உள்நாட்டு நன்கொடையாளர்கள் பெயர் என்ன என்பது குறித்த விவரங்கள் இல்லை.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

“பிஎம் கேர்ஸ் நிதி தொடங்கப்பட்டதிலிருந்து 2020, மார்ச் 27 முதல் 31-ம் தேதிவரை 5 நாட்களில் ரூ.3,076 கோடி நிதி வந்துள்ளது என பிஎம் கேர்ஸ் தணிக்கையாளர்கள் உறுதி செய்துள்ளார்கள்.

ஆனால், அந்தப் பெருந்தன்மையான நன்கொடையாளர்கள் பெயரை இன்னும் ஏன் வெளியிடவில்லை. அதற்கான காரணம் என்ன? ஒவ்வொரு தொண்டு நிறுவனமும் அல்லது அறக்கட்டளையும் தாங்கள் பெற்ற குறிப்பிட்ட அளவு நன்கொடை குறித்த விவரத்தையும், நன்கொடை அளித்தவர்கள் பெயரையும் வெளியிடக் கடமை இருக்கிறது.

இந்தக் கடமையிலிருந்து பிஎம் கேர்ஸ் நிதிக்குக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இந்த நன்கொடையாளர்கள் நன்கு அறியப்பட்டவர்கள்தான்.

அறக்கட்டளையாளர்களுக்கும் நன்கொடையாளர்களை நன்கு தெரியும். பின் எதற்காக அறக்கட்டளை நிர்வாகிகள், நன்கொடை அளித்தவர்கள் பெயரை வெளியிட அச்சப்படுகிறார்கள்?''.

இவ்வாறு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை இணையதளத்தில், வெளியிடப்பட்ட அறிக்கையில், பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளர் ஸ்ரீகர் கே பர்தேசி, பிரதமர் மோடியின் தனிச்செயலாளர் ஹர்திக் ஷா ஆகியோர் கையொப்பமிட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x