Last Updated : 02 Sep, 2020 08:24 AM

1  

Published : 02 Sep 2020 08:24 AM
Last Updated : 02 Sep 2020 08:24 AM

கர்நாடகாவில் பசுவதை தடுப்புச் சட்டம் கொண்டு வர திட்டம்: முதல்வர் எடியூரப்பாவுடன் அமைச்சர்கள் ஆலோசனை

பெங்களூரு

கர்நாடகாவில் பசுவதை தடுப்புச் சட்டம் கொண்டு வருவது குறித்து முதல்வர் எடியூரப்பாவுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் கடந்த 2010-ம் ஆண்டு எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, பசுவதை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் மாடுகளைக் கொல்வது, மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதுஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், 2013-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் முதல்வரான சித்தராமையா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருந்த அந்த பசுவதை தடுப்புச் சட்டத்தை திரும்பப் பெற்றார்.

கடந்த 2018-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பசுவதை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டது. தேர்தலில் பாஜக தோல்வி அடைந்த நிலையில், கூட்டணி ஆட்சி அமைத்த மஜத, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஓராண்டில் கவிழ்ந்தது.

கடந்த 2019-ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா, மீண்டும் பசுவதை தடுப்புச் சட்டம் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளார். பசுக்களை பாதுகாக்க ‘பசு சஞ்சீவினி திட்டம்’ ஒன்றையும் தொடங்கி வைத்துள்ளார்.

இந்த திட்டத்தின்கீழ் பசுக்களைஆபத்தில் இருந்து பாதுகாத்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் என எடியூரப்பா தெரிவித்தார்.

இதனிடையே கர்நாடக கால்நடைத் துறை அமைச்சர் பிரபுசவான், ‘‘பசுக்களை பாதுகாக்கபசுவதை தடுப்புச் சட்டத்தைகொண்டுவர அரசு முடிவெடுத்துள்ளது. அந்த சட்டத்தை முறையாக அமல்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். முதல்வர் எடியூரப்பாவுடன் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது விவாதித்து, பசுவதைதடுப்புச் சட்டம் கொண்டுவரப் படும்'' என்றார்.

இந்நிலையில், கர்நாடக மருத் துவ கல்வித் துறை அமைச்சர் சுதாகர் நேற்று முன்தினம் சிக் பள்ளாப்பூரில் புதிய கோசாலை ஒன்றை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘இந்தியாவில் பசுக்களை கொல்வதை ஏற்க முடியாது. நம் குடும்ப உறுப்பினரைப் போன்ற பசுவை கொல்வதை குற்றமாக அறிவிக்க வேண்டும். அனைத்து மாநில அரசுகளும் பசு வதைக்கு தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும்.

கர்நாடகாவில் பசுவதைக்குதடை விதிக்கும் சட்டம் கொண்டுவரப்படும். மாட்டிறைச்சிக்கு தடை விதிப்பு, கர்நாடகாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு தடை விதிப்பது குறித்தும் விரைவில் முடிவு எடுக்கப்படும்" என்றார்.

கர்நாடகாவில் பசுவதை தடுப்புச் சட்டம் கொண்டுவர முதல்வர் எடியூரப்பா முடிவெடுத்துள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளதால், எதிர்க்கட்சி தலைவர்சித்தராமையா காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதேபோல, இஸ்லாமிய அமைப்பினரும் பசுவதை தடுப்புச்சட்டத்துக்கு எதிரான பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x