Published : 02 Sep 2020 07:20 AM
Last Updated : 02 Sep 2020 07:20 AM
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கனவு கண்ட, ரோதங் குகை பாதை திட்டம் நிறைவேறும் கட்டத்தை எட்டிவிட்டது. இமாச்சல பிரதேசத்தையும் லடாக் பகுதியையும் இணைக்கும் இந்த பாதைக்கு, ‘அடல் குகை பாதை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த குகை பாதையை இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.
பிரதமராக இருந்தபோது வாஜ்பாய் கனவு கண்ட ‘தங்க நாற்கர சாலை திட்டம்’ நிறைவேறிய பிறகு நாட்டின் எந்த மூலைக்கும் விரைந்து செல்லும் நிலை உருவானது. முக்கிய நகரங்களுடன் கிராமங்கள் இணைக்கப்பட்டன. மக்கள் போக்குவரத்துக்கான நேரம் கணிசமாகக் குறைந்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தங்க நாற்கர சாலையின் பங்களிப்பு மிகப் பெரியது. அதேபோல், வாஜ்பாய் கண்ட மற்றொரு கனவு, எல்லையில் ‘ரோதங் குகை பாதை’ திட்டம்.
இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில் இருந்து லடாக் யூனியன் பிரதேசத்தின் லே பகுதிக்கு இடையில் குகை பாதைக் கட்டப்படும் என்று கடந்த 2000-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அத்துடன், குகை பாதை அமைக்கும் பணி, ‘எல்லை சாலை மேம்பாட்டு அமைப்பிடம்’ (பிஆர்ஓ) ஒப்படைக்கப்பட்டது.
மணாலி - லே செல்ல தேசிய நெடுஞ்சாலை உள்ளது. ஆனால், கடும் பனிப்பொழிவு, நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால், ஆண்டுக்கு 4 மாதங்கள் மட்டுமே இந்த சாலை போக்குவரத்துக்கு திறந்துவிடப்படும். இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். ராணுவ வீரர்களும் பல சிரமங்களைச் சந்தித்தனர். மேலும், மணாலி - லே செல்ல 474 கி.மீ. தூரம் மலைகளைச் சுற்றிப் பயணிக்க வேண்டும். அடல் குகை பாதை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தால், இந்த தூரத்தில் 46 கி.மீ. குறைந்துவிடும். அத்துடன் 8 மணி நேர பயணத்தில், இரண்டரை மணி நேரம் குறைந்துவிடும். இதன்மூலம் எல்லைப் பகுதிக்கு ராணுவ வீரர்கள் விரைந்து செல்ல முடியும். நாட்டின் பாதுகாப்பு மேம்படும் என்று வாஜ்பாய் கனவு கண்டார்.
அவரது அறிவிப்புக்குப் பின்னர் கடந்த 2011-ம் ஆண்டு குகை தோண்டும் பணி தொடங்கியது. அப்போதுதான், இந்தத் திட்டம் எவ்வளவு கடினமானது என்பது தெரிந்தது. மொத்தம் 8.8 கி.மீ. தூரம் குகை தோண்ட வேண்டும். இந்தத் திட்டத்தை 2015-ம் ஆண்டு பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், மணாலி - லே பகுதிக்கு இடையில் கடல் மட்டத்தில் இருந்து 3,000 மீட்டர் உயரத்தில் மலைகளைக் குடைந்து குகை அமைக்க வேண்டும்.
மலைகளை குடையும் போது செரி நல்லாவில் இருந்து தண்ணீர் புகுந்தது, மலைகளை உடைப்பதற்கு தடை இருப்பது, குவாரிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு தாமதம், பல இடங்களில் கடினமான பாறைகள், பல இடங்களில் தளர்வான பாறை அடுக்குகள் போன்ற பல சிக்கல்கள் இருந்தன. இதனால் குறிப்பிட்ட காலத்தில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்தன.
அதன் பலனாக ‘அடல் குகை பாதை’ தற்போது முடியும் நிலையில் உள்ளது. இந்த மாத கடைசியில் இந்த குகை பாதையை, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்க உள்ளார்.
இந்தப் பாதையை அமைக்க700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். இந்த குகை பாதையில் வாகனங்கள் செல்ல ஒரு மணி நேரத்துக்கு 80 கி.மீ வேகம் என்ற அளவு நிர்ணயிக்கப்பட உள்ளது. எந்த பருவ காலத்திலும் குகை பாதையில் செல்ல முடியும். ஒரு நாளைக்கு சுமார் 3,000 வாகனங்கள் செல்லும் அளவுக்கு பாதை பலமானது.
இந்தத் திட்டத்தை வாஜ்பாய் அறிவித்த போது, ரூ.1,700 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டது. ஆனால், தற்போது ரூ.3,200 கோடி செலவாகி உள்ளது. இந்த சுரங்கப் பாதை இந்தியாவிலேயே மிக நீளமானது என்ற பெருமையும் பெற்றுள்ளது. குழாய் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தாலும், அவரது கனவு திட்டம் நிறைவேறுவது ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பேருதவியாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT