Published : 01 Sep 2020 04:58 PM
Last Updated : 01 Sep 2020 04:58 PM
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதாரச் சரிவிலிருந்து நாடு மீண்டுவர பல மாதங்களாகும். பொருளாதார வீழ்ச்சி வரப்போகிறது என பலமுறை எச்சரித்தோம். ஆனால், மத்திய அரசு புறந்தள்ளிவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான (ஏப்ரல்-ஜூன்) பொருளாதார அறிக்கையை தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்டது. அதில் இதுவரை இல்லாத வகையில் நாட்டின் பொருளாதாரம் 23.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்தது. வேளாண் துறையைத் தவிர அனைத்துத் துறைகளும் மோசமான சரிவைச் சந்தித்து இருந்தன.
நாட்டில் ஏற்கெனவே நுகர்வோரிடம் வாங்கும் சக்தி குறைவாக இருந்தது. அதனால் சந்தையில் தேவை குறைந்தது. முதலீட்டுக் குறைவு போன்றவை இருந்த நேரத்தில் கரோனாவால் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் நடவடிக்கை பொருளாதாரத்தைப் பாதாளத்தில் தள்ளிவிட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது:
''இந்தப் பொருளாதார வீழ்ச்சி எதிர்பார்த்ததுதான். காங்கிரஸ் கட்சி பலமுறை பொருளாதாரச் சரிவு குறித்து எச்சரித்து, தடுப்பு நடவடிக்கைகளையும், மாற்று நடவடிக்கைகளையும் எடுங்கள் என மத்திய அரசை வலியுறுத்தினோம்.
ஆனால், எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் கேட்காத காதில்தான் சொல்லப்பட்டன. ஒட்டுமொத்த தேசமும் இப்போது பொருளாதார வீழ்ச்சியால் பெரிய விலை கொடுக்கிறது. ஏழைகளும், பாதிக்கப்பட்டவர்களும் விரக்தியில் உள்ளனர்.
மோடி அரசால் மட்டும்தான் இவ்வாறு அசட்டையாகவும், கவனக்குறைவோடும் இருக்க முடியும். போலியான கதைகளை மக்களிடம் மத்திய அரசு கூறி வந்தது. ஆனால், அந்தக் கதைகள் அனைத்தும் மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் அறிக்கை மூலம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
நான் வேதனையுடன் சொல்கிறேன், இந்த வீழ்ச்சியிலிருந்து பொருளாதாரம் மீண்டு வந்து சாதகமான வளர்ச்சி நிலையை எட்டுவதற்குப் பல மாதங்கள் தேவைப்படும். அரசாங்கத்தின் செயலற்ற தன்மையும் திறமையற்ற தன்மையும் எங்களுக்கு எந்த நம்பிக்கையையும் அளிக்காது. குகையின் கடைசியில் எப்படியாவது நாம் விரைவில் ஒளியைக் காண்போம்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி 23.9 சதவீதம் வீழ்ச்சிஅடைந்துள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால், 2019-ம் ஆண்டு ஜூன் 30 வரையிலான ஒரு காலாண்டின் ஒட்டுமொத்த உற்பத்தியும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. அதாவது, 2019-20 ஆம் நிதியாண்டின் வளர்ச்சியில் 20 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
வேளாண்துறை, காடு வளர்ப்பு, மீன்பிடித்தொழில் மட்டுமே 3.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடவுள்தான் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என்று கூறியவர்கள், கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்.
பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. சில துறைகள் ஆழ்ந்த சரிவைச் சந்தித்துள்ளன. இது எங்களுக்கு வியப்பைத் தரவில்லை.
இந்தச் செய்தி வேண்டுமானால் மத்திய அரசுக்கு வியப்பாக இருக்கலாம், அவர்கள்தான் முதல் காலாண்டில் ஏதாவது பசுமை தெரிகிறதா எனப் பல நாட்களாக எதிர்பார்த்தார்கள்.
உகந்த, சரியான நிதி மற்றும் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் வீழ்ச்சியைத் தவிர்த்திருக்க முடியும். ஆனால், எதுவும் செய்யாத மத்திய அரசுக்கு இவை வெட்கக்கேடான விஷயமாக இருக்க வேண்டும், ஆனால் மோடி அரசாங்கம் எந்த வெட்கமும்படாது. தவறுகளையும் அவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதை நாங்கள் அறிவோம்,
இந்தியப் பொருளாதாரத்தை மிகவும் உன்னிப்பாகக் கவனித்தவர்கள் வீழ்ச்சி பற்றி முன்பே தெரிவித்தார்கள். சமீபத்தில் ரிசர்வ் வங்கி கூட தனது ஆண்டு அய்வறிக்கையில் பொருளாதார வீழ்ச்சி பற்றிக் குறிப்பிட்டது.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நிபுணர்கள்கூட, அமெரிக்காவின் பொருளாதாரம் தவிர்த்து இந்தியாவின் பொருளாதாரம் உலகின் வேறு எந்த நாட்டையும் விட மோசமான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றனர். இதன் மூலம் எங்களுக்கு என்ன சொல்ல வருகிறது என்றால், பொருளாதாரத்தை மோசமாக நிர்வகிப்பதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு அடுத்த இடத்தில் மோடி இருக்கிறார்''.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT