Published : 01 Sep 2020 12:34 PM
Last Updated : 01 Sep 2020 12:34 PM

எத்தனை பிராமணர்கள் துப்பாக்கி உரிமம் வைத்திருக்கிறார்கள், எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர்? : தகவல் திரட்ட உத்தரவிட்டு பின்வாங்கிய உ.பி. அரசு

வழக்கத்துக்கு மாறான ஒரு நடைமுறையில் யோகி ஆதித்யநாத் தலைமை உத்தரப் பிரதேச அரசு அனைத்து மாவட்ட மேஜிஸ்ட்ரேட்டுகளுக்கும் எழுதிய கடிதத்தில் எத்தனை பிராமணர்கள் துப்பாக்கி லைசன்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர், எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தகவலளிக்குமாறு கேட்டுக் கொண்டது.

பாஜக எம்.எல்.ஏ. தேவ்மணி திவேதி பிராமணர்களுக்கு பாதுகாப்பாற்ற நிலை, கொலைகள் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தரவுகளை கேட்டார். இதனையடுத்தே எத்தனை பிராமணர்கள் துப்பாக்கி வைத்திருக்கின்றனர், எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர், எத்தனை பேருக்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது என்ற தகவலைக் கேட்டு உ.பி. அரசு மாவட்ட மேஜிஸ்ட்ரேட்டுகளுக்கு கடிதம் எழுதியது.

முதலில் இவ்வாறு கடிதம் எழுதியதாக ஒப்புக் கொண்ட உ.பி. அரசு அதன் பிறகு பின் வாங்கியது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் ஆங்கில நாளேடு ஒன்றிற்குக் கூறும்போது, ’அந்த விவரங்களைக் கேட்கவில்லை’ என்று மறுத்தார். ஆனால் இத்தகைய துப்பாக்கி விவரங்களை ஆகஸ்ட் 18ம் தேதி கேட்டிருந்த உ.பி. அரசு, 21ம் தேதிக்குள் விவரங்களைச் சமர்ப்பிக்கக் கூறியது. மறுப்பு ஏன் செல்லுபடியாகவில்லை எனில் ஒரு மாவட்டம் இந்தத் துப்பாக்கிப் பிராமணர்கள் தகவலை அளித்துள்ளது.

விதான் சபா முதன்மைச் செயலர் பிரதீப் துபே, “இப்படிப்பட்ட தகவலை நாங்கள் கேட்கவும் இல்லை, அம்மாதிரி கேள்விகள் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல” என்று மறுத்துள்ளார்.

உ.பி.யில் சமீபகாலமாக பிராமணர்கள் பாதுகாப்பு பற்றிய கேள்விகளை எதிர்க்கட்சிகள் கிளப்பி வருகின்றன, பரசுராமர் சிலைகளையும் ஆங்காங்கே வைத்து வந்தனர். குற்றவுலக தாதா, பிரபல ரவுடி விகாஸ் துபே கொலை செய்யப்பட்டதிலிருந்து இந்த பிராமணர்கள் பாதுகாப்பு விவகாரம் அங்கு எழுந்துள்ளது, விகாஸ் துபே மற்றும் கொல்லப்பட்ட அவரது ஆதரவாளர்கள் 5 பேரும் பிராமணர்கள்.

உ.பி. வாக்குவங்கியில் 10% பிராமணர்களின் வாக்குகள் உள்ளன. சக்திவாய்ந்த வாக்குவங்கியாகத் திகழ்கிறது. இதனால் எல்லா அரசியல் கட்சிகளும் பிராமணர்களைத் திருப்தி செய்யும் விதமாக பேசி வருகின்றனர், மாயாவதி பரசுராமர் பெயரில் மருத்துவமனை திறப்பாகத் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பரசுராமருக்கு 108 அடி உயர சிலை எழுப்புவோம் என்று சூளுரைத்தார்.

சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினர் சஞ்சய் சிங், உ.பி.யில் பிராமணர்கள் துன்புறுத்தப்படுகின்றனர், இதனால் பிராமண சமுதாய பாஜக எம்.பி.க்கள் ஆளும் பாஜக மீது அதிருப்தியில் உள்ளதாகத் தெரிவித்தார். உடனே சஞ்சய் சிங் மீது பகைமை வளர்க்கிறார், சமூக ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கிறார் என்று உ.பி.அரசு வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x