Last Updated : 01 Sep, 2020 11:28 AM

 

Published : 01 Sep 2020 11:28 AM
Last Updated : 01 Sep 2020 11:28 AM

பிரணாப் முகர்ஜி இல்லத்தில் பிரதமர் மோடி, ராம்நாத் கோவிந்த், வெங்கய்ய நாயுடு இறுதி அஞ்சலி

பிரணாப் முகர்ஜி உருவப்படத்துக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அவரின் இல்லத்தில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் மலர்கள் தூவி இன்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மூளையில் ஏற்பட்ட சிறிய கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்காக கடந்த 10ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா இருப்பது தெரியவந்தது.

இருப்பினும் பிரணாப் முகர்ஜிக்கு அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டபின் ஆழ்ந்த கோமா நிலைக்குச் சென்றார். கடந்த சில வாரங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று பிரணாப் முகர்ஜி காலமானார்.

பிரணாப் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர் மோடி

பிரணாப் முகர்ஜியின் உடல் இன்று அதிகாலை டெல்லி ராஜாஜி மார்க் சாலையில் இருக்கும் அவரின் இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. இன்று காலை முதல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய உயர் அதிகாரிகள், விஐபிக்கள் மலர்கள் தூவி இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று பிற்பகலுக்குப்பின் பிரணாப் முகர்ஜியின் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட உள்ளது.

பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி, 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. இதன்படி அனைத்துஅரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பிரணாப் முகர்ஜியின் இல்லத்துக்கு இன்று காலை பிரமதர் மோடி வந்து அவரின் உருவப்படத்துக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் பிரணாப் முகர்ஜியின் மகன், மகள் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துச் சென்றார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் பிரணாப் முகர்ஜி இல்லத்துக்கு வந்து மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மேலும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, தலைமைபாதுகாப்பு அதிகாரி ஜெனரல் பிபின் ராவத், ராணுவ ஜெனரல் எம்.எம்.நரவானே, விமானப்படைத் தளபதி ஆர்.கே.எஸ். பகதூரியா, கப்பற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் ஆகியோர் வந்து மலர்கள் தூவி பிரணாப் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x