Last Updated : 09 Sep, 2015 09:09 AM

 

Published : 09 Sep 2015 09:09 AM
Last Updated : 09 Sep 2015 09:09 AM

சிறப்பு படையை அன்றாட பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதா? - மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சிஆர்பிஎப் புகார் கடிதம்

அன்றாட பாதுகாப்பு பணிகளில் விரைவு அதிரடிப் படை (Rapid Action Force RAF) ஈடுபடுத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) புகார் கூறியுள்ளது.

சிஆர்பிஎப் பிரிவின் கீழ், கல வரக் காலங்களில் விரைந்து செயல் படுவதற்காக ஆர்ஏஎப் எனும் சிறப் புப் படை செயல்பட்டு வருகிறது. தீவிரவாதத் தாக்குதல்களை முறியடிப்பதற்காகவும் இப்பிரிவு உருவாக்கப்பட்டது. ஆனால் இந்தப்படை, டெல்லியில் கலவரத்தின்போது மட்டுமின்றி முக்கியப் பிரமுகர்கள் செல்லும் பாதைகள், அரசியல் கூட்டங்கள் என அன்றாட பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

ஆந்திர மாநிலம், பழைய ஹைதராபாத் நகரில் உள்ள சார்மினார் மசூதிப் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை தோறும் ஆர்ஏஎப் வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது, சிறப்பு படையாக உருவாக்கப்பட்ட ஆர்ஏஎப்-ன் செயல்விதிகளை மீறுவதாகும் என சிஆர்பிஎப் புகார் கூறியுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சிஆர்பிஎப் எழுதியுள்ள கடிதத்தில், “நாட்டின் அனைத்து மாநிலங்களில் தலை வர்களின் பிறந்த நாள் விழாக்கள், வெளிநாட்டுக் குழுவின் இந்திய வருகை மற்றும் பண்டிகைக்கால விழாக்கள் போன்றவற்றின் பாதுகாப்பு பணிகளில் ஆர்ஏஎப் அமர்த்தப்படுகிறது. இதுபோல் வழக்கமான போலீஸ் ரோந்துப் பணிகளிலும் ஆர்ஏஎப் ஈடுபடுத்தப்படுகிறது. இதனால் இதுபோன்ற சிறப்பு பாதுகாப்பு படைகளின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது. இதை கவனத்தில் கொண்டு உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

கலவர நேரங்களில் மாநிலங்கள் சார்பிலும் ஆர்ஏஎப் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அருகிலுள்ள ஆர்ஏஎப் படையின் கமாண்டருக்கு கோரிக்கை அனுப்பினால் அதிகபட்சம் 3 நாட்களுக்கு ஆர்ஏஎப் பணியமர்த்தப்படுவது வழக்கம்.

இந்தப் பணிக்கு உள்துறை அமைச்சகத்திடமும் மாநில அரசுகள் ஒப்புதல் பெறவேண்டும். இதிலும் சில விதிமீறல்கள் நடைபெறுவதாக சிஆர்பிஎப் தனது கடிதத்தில் புகார் கூறியுள்ளது.

இது குறித்து சிஆர்பிஎப் அதிகாரிகள் வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறும்போது, “கலவர நேரங்களில் எங்களை பயன்படுத்திக்கொள்ளும் மாநில அரசுகள், அதற்கான ஒப்புதலை மத்திய அரசிடமும் பெற்றதற்கான தகவலை எங்களிடம் தெரிவிப்பதில்லை. 3 நாட்களுக்கு மேல் எங்கள் பணியை கோரும் மாநிலங்கள் பலநேரங்களில் உள்துறை அமைச்சகத்திடம் பெற்ற அனுமதியின் நகலை எங்களுக்கு அளிப்பதில்லை. முக்கியத்துவம் வாய்ந்த இந்த விதிமீறலை கவனத்தில் கொண்டு நாங்கள் பணியாற்ற மறுத்தால் கலவரம் கட்டுக்கடங்காமல் போகும் ஆபத்து உள்ளது” என்று தெரிவித்தனர்.

இதே கடிதத்தில் மதக்கலவர பதற்றமான பகுதிகளில் பொதுநலப் பணிகளில் ஈடுபட நிதி ஒதுக்கும்படியும் சிஆர்பிஎப் கேட்டுள்ளது. அப்பகுதி மக்களின் நல்லெண்ணத்தை ஆர்ஏஎப் பெறுவதற்கு இது உதவியாக இருக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு கடந்த 1991, டிசம்பர் 11-ம் தேதி ஆர்ஏஎப் உருவாக்கப்பட்டது. மதக் கலவர பதற்றம் நிறைந்த பகுதிகளான டெல்லி, மும்பை, அகமதாபாத், போபால், அலிகர், மீரட், ஹைதராபாத், ஜம்ஷெட்பூர், அலகாபாத் மற்றும் தமிழகத்தின் கோவையில் இப்படை முகாமிட்டுள்ளது.

மத்திய அரசின் மற்ற பாதுகாப்பு படைகளை விட ஆர்ஏஎப் வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப் படைகளின் பயன்பாட்டுக்கு நவீன ஆயுதங்களும் வழங்கப்படு கின்றன. மாநில அரசுகள் மட்டுமின்றி மத்திய அரசும் இந்தப் படைப் பிரிவை தவறாக பயன்படுத்துவதாக புகார் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x