Published : 01 Sep 2020 06:41 AM
Last Updated : 01 Sep 2020 06:41 AM
மும்பை விமான நிலையத்தில் 74 சதவீத பங்கை அதானி குழுமம் வாங்குகிறது. மேலும் புதிதாக வரவுள்ள நவி மும்பை விமான நிலையமும் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் வரவுள்ளது.
மும்பை சர்வதேச விமான நிலையத்தை நிர்வகித்து வரும் ஜிவிகே குழுமத்திடம் இருந்து 50.5 சதவீத பங்கையும், தென் ஆப்பிரிக்க ஏர்போர்ட் கம்பெனியிடம் 10 சதவீதமும், தென் ஆப்பிரிக்க பிட்வெஸ்ட் நிறுவனத்திடம் 13.5 சதவீதமும் பங்குகளைக் கைப்பற்றுகிறது அதானி குழுமம். இதன்மூலம் மும்பை விமான நிலையம் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் ஜிவிகே குழுமமும், அதானி குழுமமும் நேற்று கையெழுத்திட்டன. மீதமுள்ள 26 சதவீத பங்குகள் இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏஏஐ) வசம் இருக்கின்றன.
மேலும் அதானி குழுமம் நவி மும்பையில் புதிதாக வரவுள்ள விமான நிலையத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர உள்ளது. பங்குச் சந்தையிடம் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விவரங்களை அதானி குழுமம் குறிப்பிட்டுள்ளது.
இவை மட்டுமல்லாமல் ஜெய்ப்பூர், குவாஹாத்தி, திருவனந்தபுரம், அகமதாபாத், லக்னோ, மற்றும் மங்களூரு ஆகிய 6 விமான நிலையங்களின் ஏலத்திலும் முன்னணியில் இருக்கிறது அதானி குழுமம். இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிலைய நிர்வகிப்பு நிறுவனமாக அதானி குழுமம் உருவெடுத்துள்ளது. ஆனால், கேரள அரசு திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி வசம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜிவிகே குழுமத்தின் கடன், கடன் உத்தரவாதங்களை விடுவிக்கும் பொறுப்பை அதானி குழுமம் ஏற்றுக்கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT