Published : 31 Aug 2020 07:48 PM
Last Updated : 31 Aug 2020 07:48 PM
எப்போதும் என்னை ஆசிர்வதித்த அரசியல்வாதி, மிகச்சிறந்த அறிஞர், நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அழியாத அடையாளத்தை விட்டுச் சென்றவர் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மூளையில் ஏற்பட்ட சிறிய கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்காக கடந்த 10ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா இருப்பது தெரியவந்தது.
இருப்பினும் பிரணாப் முகர்ஜிக்கு அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டபின் கோமா நிலைக்குச் சென்றார். கடந்த சில வாரங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று பிரணாப் முகர்ஜி காலமானார்.
பிரணாப் முகர்ஜி மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்ட கருத்தில் “ பிரணாப் முகர்ஜி தனது நீண்டகால அரசியல் பயணத்தில் பொருளாதாரத்திலும், பல்வேறு அமைச்சர்பதவிகளிலும் நீண்டகாலத்துக்கு நிலைக்கும் வகையில் பங்களிப்பு செய்துள்ளார். மிகச்சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர், எப்போதுமே தயாராக அவைக்கு வருவார், வெளிப்படையாகவும், நகைச்சுவையாகவும் பேசக்கூடியவர்.
நான் பிரதமராக முதன்முதலில் வந்தபோது, பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராகஇருந்தார். எனக்கு பல்வேறு வகைகளில் ஆதரவாகவும், வழிகாட்டியாகவும் இருந்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு டெல்லிக்கு வந்த முதல்நாளில் இருந்து அவரின் வழிகாட்டுதல்கள், ஆதரவு, ஆசிகளைப் பெற்றேன். அவருடானான என்னுடைய தொடர்புகள், உரையாடல்களை எப்போதுமே போற்றுதற்குரியது. அவரின் குடும்பத்தினர், நண்பர்கள், தேசம் முழுவதும் இருக்கும் அவரின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக இருந்தபோது, குடியரசுத் தலைவர் மாளிகை எப்போதும் சமானிய மக்கள் அனுகக்கூடியதாக இருந்தது. பிரணாப் முகர்ஜியின் குடியரசுத் தலைவர் மாளிகை கற்பதற்கும், புத்தாக்கத்துக்கும், கலாச்சாரம், அறிவியல், இலக்கியத்துக்கும் மையாக இருந்தது.
நான் முக்கியமான கொள்கை முடிவுகள் எடுக்கும்போது, அவரின் அறிவார்ந்த ஆலோசனைகளை ஒருபோதும் மறக்க முடியாது. பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி மறைவை நினைத்து இந்தியா வருத்தம் கொள்கிறது.தேசத்தின் வளர்ச்சிப் பாதையில் அழிக்க முடியாத அடையாளத்தை பிரணாப் முகர்ஜி விட்டுச் சென்றுள்ளார். அறிவார்ந்தவர், அரசியல் வட்டாரத்திலும் சமூகத்திலும் அனைவராரும் ஈர்க்கப்பட்ட உயர்ந்த தலைவர். எப்போதும் என்னை ஆசிர்வதித்தவர்
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், தனது ட்டவிட்டர் பக்கத்தில் பிரணாப் முகர்ஜியின் பாதங்களில் பணிந்து வணங்கும் படத்தையும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT