Published : 31 Aug 2020 02:45 PM
Last Updated : 31 Aug 2020 02:45 PM
கரோனா வைரஸுக்கு எதிரான போரில் உயிரிழந்த மருத்துவர்களை, ராணுவத்தில் போரின்போது உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு இணையாகக் கருத வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு (ஐஎம்ஏ) கடிதம் எழுதியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப அரசுப் பணியும் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு பிரதமர் மோடிக்கு கடந்த 30-ம் தேதி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:
''கரோனாவுக்கு எதிரான போரில் இதுவரை 87 ஆயிரம் மருத்துவப் பணியாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 573 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. ஆனால், இதுவரை மத்திய அரசு சார்பில் அதிகாரபூர்வமாக எந்த விதமான புள்ளிவிவரங்களும் வெளியிடப்படவில்லை.
இதில் மருத்துவர்கள் மட்டும் 2,006 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் 307 பேர் உயிரிழந்தனர் என்று ஐஎம்ஏ சேகரித்த புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது. இதில் உயிரிழந்த 188 மருத்துவர்கள் பொது மருத்துவர்கள். நோயாளியை நேரடியாகத் தொடர்புகொண்டு சிகிச்சையளிக்கும்போது பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
மருத்துவர்கள் அதிகமான வைரஸ் பாதிப்பாலும், அதிகமான வீதத்திலும் உயிரிழந்துள்ளனர். கரோனா காலத்தில் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க மருத்துவர்கள் வீட்டிலேயே இருந்திருக்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்ட ஐஎம்ஏ மறுக்கிறது. ஆனால், மருத்துவர்கள் தேசத்துக்குச் செய்வதுதான் மருத்துவத் தொழிலின் அறம், பாரம்பரியம் எனக் கருதி பணியாற்றி வருகின்றனர்.
அரசு சேவையில் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு போன்று கரோனாவில் உயிர்த் தியாகம் செய்த மருத்துவர்களின் குழந்தைகளுக்கும் உரிய இழப்பீட்டை அரசு வழங்கிட வேண்டும்.
கரோனாவுக்கு எதிரான போரில் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த மருத்துவர்கள் அனைவரையும், இந்திய ராணுவத்தில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு இணையாகக் கருத வேண்டும், அதை முறையாக அங்கீகரிக்க வேண்டும். உயிரிழந்த மருத்துவர்களின் மனைவிக்கோ அல்லது குடும்பத்தில் ஒருவருக்கோ தகுதிக்கு ஏற்ப அரசுப் பணி வழங்கிட வேண்டும்.
எந்தவிதமான இழப்பீடு திட்டத்தை அறிவித்தாலும் போதுமான அளவு செயல்திட்டங்கள் இல்லாமலும், வேறுபாடான நடைமுறையால் அது முறையாக பயனாளிகளுக்குச் சென்று சேர்வதில்லை. இதுகுறித்து மறுபரிசீலனை செய்து, இழப்பீடு குறித்து நிர்வகிக்க ஒரு பிரத்யேக அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.
கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் முன்களப் படை வீரர்களை ஆதிரிக்கும் ஒரு தேசியத் திட்டத்தை, அரசாங்க ஊழியர்களுக்கான மற்றொரு சாதாரண இழப்பீடு திட்டம் போன்று சிதைக்க அனுமதிக்க முடியாது,
கரோனாவில் உயிரிழந்த மருத்துவர்களின் உயிர்த் தியாகத்தை தேசத்தின் உயர்ந்த துறையான பிரதமர் அலுவலகம் அங்கீகரிக்க வேண்டும் என்று நாங்கள் மீண்டும் ஒருமுறை உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
ஒரு சில வாரங்களில் இந்தியா கரோனா பாதிப்பில் உலகில் முதலிடம் வகிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் நாங்கள் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறோம். சுகாதாரத் துறை, மனித சக்தி விலைமதிப்பற்றது என்பதால், நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறைகள் வைக்கப்பட வேண்டும்''.
இவ்வாறு ஐஎம்ஏ கடிதத்தில் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT