Published : 30 Aug 2020 05:45 PM
Last Updated : 30 Aug 2020 05:45 PM
கடந்த 2019-ம் ஆண்டு நிலவரப்படி நாட்டில் உள்ள சிறைகளின் கொள்ளவுக்கும் அதிகமாக கைதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள். பாராமரிப்புக்கு போதுமான அளவு ஊழியர்கள் இல்லை என தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(என்சிபிஆர்) தகவல் தெரிவித்துள்ளது.
2019-ம்ஆண்டு நிலவரப்படி நாட்டில் உள்ள சிறைகளின் நிலவரம் குறித்து என்சிஆர்பி வெளியிட்ட தகவலில் கூறப்பட்டு இருப்பதாவது:
நாட்டில் உள்ள சிறைகளில் அதிகபட்சமாக 4.03 லட்சம் கைதிகளை அடைத்து வைக்க முடியும். ஆனால், 2019,டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி சிறைகளில் அளவுக்கு அதிகமாக 4.78 லட்சம் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சிறை கைதிகள், சிறை பராமரிப்புக்கு ஒட்டுமொத்தமாக 87 ஆயிரத்து 599 ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், கடந்த ஆண்டு, டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி 60 ஆயிரத்து 787 ஊழியர்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். ஏறக்குறைய 27 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
கடந்த 2017-ம் ஆண்டுவரை இந்திய சிறைகளில் 3.91 லட்சம் கைதிகள் அடைக்கப்படலாம் என்ற அளவு, 2018-ம் ஆண்டில் 3.96 லட்சம் கைதிகளாகவும் அதிகரிக்கப்பட்டு, 2019-ம் ஆண்டு 4.03 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஆனாால், அந்த அளவுக்கும் அதிகமாக கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது கடந்த 2017-ம் ஆண்டில் 4.50 லட்சம் பேர் அடைக்கப்பட்ட நிலையில், 2018-ம் ஆண்டில் 4.66 லட்சம் பேராக அதிகரித்து, 2019-ம் ஆண்டில் 4.78 லட்சம் கைதிகளாக அதிகரித்துவிட்டது.
நாட்டில் 2017-ம் ஆண்டில் 1,361 சிறைகள் இருந்த நிலையில், 2018-ல் 1,339 ஆகவும், 2019-ம் ஆண்டில் 1,350 ஆகவும் இருக்கிறது.
சிறையில் கைதிகளை அடைக்கும் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 2017-ம் ஆண்டில் 115 சதவீதம் அதிகமாகவும், 2018-ம் ஆண்டில் 117.6 சதவீதம் அதிகமாவும், கடந்த 2019-ம் ஆண்டில் 118.50 சதவீதம் அதிகமாகவும் உள்ளனர்.
2019-ம் ஆண்டு கணக்கின்படி சிறையில் இருக்கும் 4.78 லட்சம் கைதிகளில் 4.58 லட்சம் கைதிகள் ஆண்கள், 19 ஆயிரத்து 913 கைதிகள் பெண்கள் ஆவர்.
2019-ம் ஆண்டு கணக்கின்படி, நாட்டில் 1,350 சிறைகள் இருக்கின்றன, இதில் 617 கிளை சிறைகளும், 410 மாவட்ட சிறைகளும், 144 மத்திய சிறைச்சாலைகளும், 86 திறந்தவெளி சிறைகளும், 41 சிறப்பு சிறைச்சாலைகளும், 31 பெண்களுக்கான சிறைச்சாலைகளும், 19 சிறுவர் சீர்த்திருத்த பள்ளிகளும், மற்ற இரு சிறைகளும் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சிறைச்சாலைகளில் அதிகபட்சமாக 1.77 லட்சம் கைதிகளும், மாவட்ட சிறைகளில் 1.58 லட்சம் கைதிகளும், கிளைச்சிறைகளில் 45,071 கைதிகளும் கடந்த ஆண்டு நிலவரப்படி அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு சிறைகளில் 7,262 கைதிகளும், திறந்தவெளிச் சிறைகளில் 6,113 கைதிகளும், பெண்களுக்கான சிறைகளில் 6,511 கைதிகளும் கடந்த ஆண்டு நிலவரப்படி உள்ளனர்.
சிறைகளைப் பராமரிக்க 87,599 ஊழியர்கள் தேவைப்படும் நிலையில், கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி 60 ஆயிரத்து 787 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். சிறையை பராமரிக்க நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிகளான டிஜி, கூடுதல் டிஜி, ஐஜி, டிஐஜி, ஏஐஜி, எஸ்பி, ஆகியோர் 7,239 பேர் இருக்க வேண்டும், ஆனால், 4,840 பேர் மட்டுேம உள்ளனர்.
அதேபோல, சிறையில் தலைமை வார்டன், தலைமை மாட்ரன், வார்டன் என 72,273 பேர் இருக்க வேண்டும் ஆனால், 51,126 பேர் மட்டுமே இருக்கிறார்கள். கைதிகள் நல அதிகாரி, மனநல நிபுணர் என 1,307 பேரும் இருக்க வேண்டும். ஆனால், 761 பேர் மட்டுமே உள்ளனர்.
சிறையில் 3,320 மருத்துவப் பணியாளர்கள் இருக்க வேண்டும், ஆனால், 1,962 பேர் மட்டுமே இருக்கின்றனர்
இவ்வாறு என்சிஆர்பி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT