Last Updated : 30 Aug, 2020 07:56 AM

1  

Published : 30 Aug 2020 07:56 AM
Last Updated : 30 Aug 2020 07:56 AM

12-ம் வகுப்பு, கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு செப் 15ல் சோதனை முறையில் வகுப்புகள் தொடக்கம்: அசாம் அரசு அறிவிப்பு

பிரதிநிதித்துவப்படம்

கவுகாத்தி,


அசாம் மாநிலத்தில் 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் செப்டம்பர் 15-ம் தேதி முதல் வகுப்புகள் அதிகாரபூர்வமற்ற முறையில் தொடங்கப்படும் என்று மாநில கல்வி அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவி்த்துள்ளார்.

மத்திய அரசு நேற்று வெளியிட்ட அன்-லாக் 4 விதிமுறைகளில் செப்டம்பர் 30-ம் தேதிவரை பள்ளிகளை, கல்லூரிகளைத் திறக்க தடை விதித்துள்ளது. இருப்பினும் 9ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்பப்பட்டால், பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனைகள், சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கலாம் எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அசாம் மாநிலத்தில் செப்டம்பர் 15-ம் தேதி முதல் பரிசோதனை அடிப்படையில் 12-ம் வகுப்பு, கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்பைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா

இதுகுறித்து மாநிலக் கல்வி அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:

“ 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்காக செப்டம்பர் 15-ம் தேதி முதல் 30-ம் தேதிவரை அதிகாரபூர்வமற்ற வகுப்புகள் தொடங்கப்படும். ஆனால், ஆசிரியர், மாணவர் யாருக்கேனும் கரோனா தொற்று ஏற்பட்டால் உடனடியாக வகுப்புகள் ரத்து செய்யப்படும்.

பரிசோதனை அடிப்படையில் தான் இந்த வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. பள்ளித் தலைமை ஆசிரியர் , கல்லூரி முதல்வர் இந்த வகுப்புகள் குறித்து ஆசிரியர்களிடமும், பேராசிரியரிகளிடமும் பேச வேண்டும்.

நடுநிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் வாரத்துக்கு ஒருமுறை பள்ளிக்கு வந்து, மதிய உணவுக்கான பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். செப்டம்பர் 15-ம் தேதியிலிருந்து இரு வாரத்துக்கு ஒருமுறை மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும்.

அப்போது ஆசிரியர்கள் பாடநூல்களையும், கேள்வித்தாளையும் அளிப்பார்கள். அடுத்த வாரம் வரும்போது அந்த கேள்வித்தாளுக்கான பதிலை எழுதிக் கொடுக்க வேண்டும்.

ஆசியர்கள், மாணவர்கள் பதில் அளித்து எழுதிய தாளை மதிப்பிட்டு, அடுத்த தேர்வுகளை நடத்துவார்கள். செப்டம்பர் 1-ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும், பள்ளியின் சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து மதிப்பிட்டு அதை பராமரிக்க உதவ வேண்டும். இதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, வரும் நாட்களில் பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

மாணவர்கள் சமூக விலகலுடன் அமரும் வகையில், இருக்கைகளை மாற்றப்பட வேண்டும் என்பதை ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும். மாணவர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், கரோனா பாதிக்கப்பட்டவர்களை வைக்கப்பட்டிருக்கும் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படாது”

இவ்வாறு ஹிமாந்தா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x