Published : 29 Aug 2020 06:26 PM
Last Updated : 29 Aug 2020 06:26 PM
நாட்டின் ஜனநாயகத்தின் மீது சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. தேச விரோத, ஏழைகள் விரோத சக்திகள் தேசத்தில் வெறுப்புணர்வையும், வன்முறை விஷத்தையும் பரப்புகின்றன என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய சட்டப்பேரவைக் கட்டிடம் கட்டும் அடிக்கல் நாட்டுவிழா நவா ராய்ப்பூரில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநில முதல்வர் பூபேஷ் பாகல், சபாநாயகர் சரண் தாஸ் மகந்த், அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காணொலி வாயிலாகப் பேசியதாவது:
''கடந்த காலத்தில் நாட்டைத் தடம்புரளச் செய்யும் முயற்சிகள் நடந்தன. நம்முடைய ஜனநாயகத்தின் முன் புதிய சவால்கள் வந்திருக்கின்றன. முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நம் நாடு இருக்கிறது.
ஏழைகள் விரோத சக்திகளும், தேசவிரோத சக்திகளும், ஆள்பவர்களும் வெறுப்பையும், வன்முறை விஷத்தையும் பரப்பி மக்களை ஒருவொருக்கொருவர் சண்டையிடும் வகையில் செய்கிறார்கள்.
மோசமான சிந்தனைகள், நல்ல சிந்தனைகளை ஆதிக்கம் செய்கின்றன. கருத்துச் சுதந்திரம் ஆபத்தில் இருக்கிறது. ஜனநாயக அமைப்புகள் அழிக்கப்படுகின்றன. நம்முடைய ஜனநாயகத்தின் மீது சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.
அவர்களுக்கு என்ன தேவை? தேசத்தின் மக்களும், இளைஞர்களும், பழங்குடி மக்களும், நம்முடைய பெண்களும், விவசாயிகளும், வர்த்தகர்களும், சிறிய வணிகர்களும், ஜவான்களும் வாயை மூடி இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.
அடுத்த இரு ஆண்டுகளில் நம்முடைய தேசம் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ளது. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பின், இந்த தேசம் இதுபோன்ற இக்கட்டான சூழலைச் சந்திக்கும். நம்முடைய அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம் ஆபத்தில் இருக்கும் என தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஜி.வி.மவலான்கர், பி.ஆர்.அம்பேத்கர், நம்முடைய முன்னோர்கள் யாரும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.
இந்த நாள் மிகவும் முக்கியமான நாள். இந்தியாவின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். நாம் ஆட்சியில் இருக்கும் காலம்வரை ஒரு உறுதிமொழி எடுக்க வேண்டும். மக்களின் நலன் காக்க கடைசிவரை போராட வேண்டும் என முடிவு எடுக்க வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டம் என்பது கட்டிடங்களால் பாதுகாக்கப்படவில்லை, உணர்வுகளால் பாதுகாக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்''.
இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT