Published : 29 Aug 2020 04:42 PM
Last Updated : 29 Aug 2020 04:42 PM
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனம், சம்ஸ்கிருதத்தில் உள்ள அறிவியல், மற்றும் கணிதம் குறித்த புதிய பாடப்பிரிவை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய பாடப்பிரிவுக்கு “ஆழ்ந்த சம்ஸ்கிருத சூழலில் இந்தியாவின் செம்மொழி அறிவியல் நூல்களைப் புரிந்து கொள்வது” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய பாடப்பிரிவு கடந்த 22-ம் தேதி தொடங்கப்பட்டுவிட்டாலும், அதிகாரபூர்வமாக அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தொடங்கப்படுகிறது. உலகம் முழுவதிலிருந்தும் 750-க்கும் மேற்பட்டவர்கள் இந்தப் பாடப்பிரிவில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இந்தப் பாடப்பிரிவு மொத்தம் 62 மணிநேர வகுப்புகளைக் கொண்டது. இரு வாரங்களுக்கு ஒருமுறை மட்டும் வகுப்புகள் நடைபெறும் வகையில் பாடப்பிரிவுகள் உள்ளன.
இந்தப் பாடப்பிரிவு குறித்து ஐஐடி பேராசிரியர் நீலேஷ் குமார் நிருபர்களிடம் கூறுகையில், “சம்ஸ்கிருதம் என்பது பழங்கால மொழி. இந்த மொழியில் செழுமையான கணிதமும், அறிவியல் ஞானமும் புதைந்து கிடக்கின்றன.
ஆனால், இதன் அற்புதத்தன்மை குறித்து இப்போதுள்ள தலைமுறையினருக்குப் புரியவில்லை. ஆதலால், இந்தப் பாடப்பிரிவைத் தொடங்கி சம்ஸ்கிருதத்தில் இருக்கும் கணிதம், அறிவியல் அறிவை மாணவர்களுக்கு சம்ஸ்கிருத மொழியிலேயே கற்றுத்தர இருக்கிறோம்.
வேறு மொழியில் இதைக் கற்பதைவிட சம்ஸ்கிருதத்திலேயே இதைக் கற்றால்தான் அதன் தன்மை புரியும். இந்தப் பாடப்பிரிவு மூலம் மீண்டும் பலரையும் ஒன்றாக இணைப்பதை நான் பெருமையாகக் கொள்கிறேன்.
இந்தப் பாடப்பிரிவில் சேரும் மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி, புத்தாக்கம், மேற்படிப்பு ஆகியவற்றுக்கும் கணிதம், அறிவியலை சம்ஸ்கிருதத்தில் கற்றுத் தருவதற்கு உதவும்” எனத் தெரிவித்தார்.
இந்தப் பாடப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் காந்தி எஸ்.மூர்த்தி கூறுகையில், “முதலில் இந்தூர் ஐஐடி மாணவர்களுக்கு சம்ஸ்கிருதத்தைக் கற்றுக்கொடுத்து, அதைத் தங்கள் மொழியில் புரிந்து கொள்வதற்கு உதவுவோம். அதன்பின் சம்ஸ்கிருதத்தில் உள்ள கணிதம், அறிவியல், வானவியல் உள்ளிட்டவற்றைக் கற்கலாம்.
சம்ஸ்கிருதம் தெரியாதவர்களுக்கு அடிப்படையான பாடங்களான முதல்நிலை கற்றுக் கொடுக்கப்பட்டு 2-ம் நிலைக்கு அனுப்பப்படுவார்கள். சம்ஸ்கிருதம் தெரிந்த மாணவர்கள் நேரடியாக 2-ம் நிலைக்குச் செல்லலாம். பாடத்தில் சேரும் மாணவர்கள் அனைவரும் சம்ஸ்கிருதத்தில் உரையாடத் தெரிந்திருப்பது கட்டாயமாகும்.
சம்ஸ்கிருதத்தில் உரையாட முடியாத மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படாது.
இதுவரை இந்தப் பாடப்பிரிவில் சேர விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்த 750க்கும் மேற்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் பணியாற்றுபவர்கள். 50 சதவீதம் பேர் பட்டப்படிப்பும், முதுநிலைப் பட்டமும், டாக்டர் பட்டமும் பெற்றவர்கள்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT