Published : 29 Aug 2020 09:12 AM
Last Updated : 29 Aug 2020 09:12 AM
ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கு உதவுமாறு முத்திரைத்தாள் தீர்வயை குறைக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலர் துர்கா சங்கர் மிஸ்ரா கூறியதாவது:
கரோனா பெருந்தொற்று, அதனையடுத்த லாக்-டவுன் ஆகியவற்றால் ரியல் எஸ்டேட் துறை பின்னடைவு கண்டுள்ளது. இந்தத் துறையை மேம்படுத்த சொத்து விற்பனைக்கான முத்திரைத்தாள் தீர்வையை குறைக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை ஏற்று மகாராஷ்டிரா மாநிலம் முத்திரைத்தாள் தீர்வையை 5% லிருந்து 3% ஆகக் குறைத்துள்ளது. இந்தனால் சொத்து வாங்குவோரின் செலவு குறையும். ரியல் எஸ்டேட் துறையும் ஊக்கம் பெறும். இதை மற்ற மாநிலங்களும் பின் பற்ற வேண்டும்.
தேங்கியுள்ள வீட்டு வசதி திட்டங்களை விரைவில் முடிக்க இடர்பாட்டு காப்பு நிதியிலிருந்து மத்திய அரசு ரூ.9,300 கோடி முதலீடு செய்ய ஒப்புக் கொண்டுள்ளது. கட்டுமான நிறுவனங்கள், குடியிருப்புகளின் விலையைக் குறைக்க வழிவகை செய்யுமாறு வருமான வரித்துறை சட்டத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து மத்திய நிதியமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தப்படும்.
புலம்பெயர்வோர் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு குறைந்த விலையில் அடுக்கு மாடி வாடகைக் குடியிருப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இது வீட்டு வாடகைத்துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எளிமையாக்கப்பட்ட மாதிரி வாடகைதாரர் சட்ட வரைவை ஓரிரு மாதங்களில் இறுதி செய்து, மாநிலங்களுக்கு அனுப்பும்., என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT