Published : 28 Aug 2020 08:54 PM
Last Updated : 28 Aug 2020 08:54 PM
உத்திரப்பிரதேசத்தில் ஐந்து லட்சம் பேர் எழுதிய பிஎட் உள்ளிட்ட 2 தேர்வுகளில் கரோனா பாதிப்புகள் ஏற்படவில்லை, இதனால், மத்திய அரசின் அறிவுரைப்படி ஜேஇஇ, நீட் நுழைவுத்தேர்வுகள் நடைபெறும் என அம்மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு அறிவித்துள்ளது.
பொறியியல் மற்றும் மருத்துவக் கல்விகளுக்கான ஜேஇஇ, நீட் நுழைவுத் தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு தமிழகம், மேற்கு வங்கம் ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்புகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், பாஜக ஆளும் முக்கிய மாநிலமான உ.பி.யில் ஜேஇஇ, நீட் தேர்வுகளுக்கு ஆதரவான நிலை இருப்பது வெளியாகி உள்ளது. இங்கு கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பிஎட் தகுதி பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றது.
இதில் சுமார் 5 லட்சம் பேர் இடம்பெற்று தேர்வு எழுதினர். இதற்கும் முன்பாக உ.பி. மாநில அரசுபணித் தேர்வாணையத்தின் தகுதித் தேர்வும் நடைபெற்றது.
இவ்விரண்டு தேர்வுகளிலும் கரோனா பரவல் பாதிப்பு குறித்த செய்திகள் வெளியாகவில்லை. இதை குறிப்பிட்ட உ.பி. மாநில அரசின் கூடுதல் தலைமை செயலாளரான அவினேஷ் அவஸ்தி இன்று செய்தியாளர்களிடம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
இதில் உயர் அதிகாரியான அவஸ்தி கூறும்போது, ‘‘இந்த மாதம் நடைபெற்ற இரண்டு முக்கியத் தேர்வுகளில் யாருக்கும் கரோனா பாதிப்புகள் இல்லை. இதற்கு அதில் கடைப்பிடிக்கப்பட்ட சமூக விலகல் காரணமாக இருந்தது.
இதில் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர். எனவே, இதேமுறையில் ஜேஇஇ, நீட் தேர்வுகளையும் மத்திய அரசின் அறிவுரைப்படி நடத்த உள்ளோம்.’’ எனத் தெரிவித்தார்.
எதிர்கட்சிகள் போராட்டம்
இதனிடையே, உ.பி.யில் ஜேஇஇ. நீட் தேர்வுகள் நடத்த அம்மாநில எதிர்கட்சிகள் மாநிலம் முழுவதிலும் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்தனியாக இந்த போராட்டங்களை நடத்தி இருந்தனர்.
இதில், முசாபர்நகரில் ஆம் ஆத்மி கட்சியினர் நடத்திய போராட்டத்தில் உ.பி. காவல்துறையின் தடியடி நடத்தப்பட்டது. காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியினரின் போராட்டத்திலும் ஆங்காங்கே லேசானத் தடியடிகள் நடத்தப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT