Last Updated : 28 Aug, 2020 03:06 PM

3  

Published : 28 Aug 2020 03:06 PM
Last Updated : 28 Aug 2020 03:06 PM

மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா பேச்சு போலித்தனம்; உள்நாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள்: மத்திய அரசு மீது டெல்லி உயர் நீதிமன்றம் அதிருப்தி

கோப்புப்படம்

புதுடெல்லி


நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள விமானநிலையங்களில் பயணிகளுக்கான சேவை, சரக்குகளை கையாளும் சேவை போன்றவற்றுக்கான ஏலத்தில் போட்டியிடும் நிறுவனங்களுக்கான தகுதியை மாற்றியிருக்கும் மத்திய அரசின் செயல், அதிருப்தியாக இருக்கிறது. உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் பேச்சு போலித்தனமாக இருக்கிறது என்று டெல்லி உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் உள்ள விமானநிலையங்களில் சரக்குகள் கையாளுதல், விமானங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சேவைகளுக்கான நிறுவனங்களைத் தேர்வு செய்யும் ஏலம் நடத்தப்பட உள்ளது.

இந்த ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான தகுதியை சமீபத்தில் இந்திய விமான ஆணையம் மாற்றி அமைத்து, ஆண்டுக்கு ரூ.35 கோடி விற்றுமுதல் இருக்கும் நிறுவனங்கள்தான் பங்கேற்க முடியும் என புதிய விதியைக் கொண்டுவந்தது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வே நிறுவனங்களின் கூட்டமைப்பான மத்திய விமானக் கொள்கை, பாதுகாப்பு மற்றும் ஆய்வு(சிஏபிஎஸ்ஆர்) டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த சிஏபிஎஸ்ஆர் என்பது, விமானத்தை சுத்தம் செய்தல், சரக்குகளை கையாளுதல், விமானங்களை வரிசையாக நிற்கவைக்க ஒத்துழைத்தல் போன்ற பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களின் கூட்டமைப்பாகும்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள், விபின் சாங்கி, ரஜனிஷ் பட்னாகர் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. சிஏபிஎஸ்ஆர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்எஸ் மிஸ்ரா ஆஜராகினார். மத்தியஅரசு, ஏஏஐ சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் ஆஜராகினார்.

அப்போது நீதிபதிகள் இருவரும், மத்தியஅரசின் நிலைப்பாடு, இந்திய விமான ஆணையத்தின் நிலைப்பாடு குறித்தும் கடுமையாக அதிருப்தி தெரிவித்து சொலிசிட்டர் ஜெனரிடம் பேசினர்.நீதிபதிகள் கூறியதாவது:

மத்திய அரசின் நிலைப்பாடு எங்களுக்கு வேதனையளிக்கிறது. ஒருபுறம் மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா என்று பிரச்சாரம் செய்கிறார்கள், மறுபுறம், விமானநிலைய சேவைக்கான டெண்டரில் சிறு நிறுவனங்களை துரத்திவிடும் வகையில் விதிகளை மாற்றுகிறார்கள்.

உண்மையில் என்னவென்றால், சிறியநிறுவனங்களை வெளியேற்ற விரும்பினால்,அவ்வாறு வெளிப்படையாகக் கூறுங்கள். உங்கள் பேச்சில் போலித்தனம் கூடாது.

உங்கள் அரசியல்தலைமைப் பதவியில் உள்ளவர்கள் மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா பற்றிப் பேசுகிறார்கள். உள்நாட்டு தொழில்களை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

ஆனால், உங்களின் செயல்பாடு அவர்களின் வார்த்தைக்குப் பொருத்தமாக இல்லையே. நீங்கள் முழுமையாக போலித்தனமாக இருக்கிறீர்கள்

இதுபோன்று சிறிய நிறுவனங்களை வெளியேற்றும் விதத்தில் நடந்துகொண்டால், எதற்காக மேக் இன் இந்தியா பற்றி உங்கள் அரசியல் தலைவர்கள் பேசுகிறார்கள். இதுபோன்று நடப்பது அவர்களுக்கு தெரியுமா.

இந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்துங்கள் என்று கூறுகிறோம். மறுபுறம் நம்முடைய சொந்த நாட்டைச் சேர்ந்த தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்துவதில் தோல்வி அடைந்துவிடுகிறோம்.

நீங்கள் ஏலத்தில் பெரிய நிறுவனங்கள் மட்டுமே போட்டியிட வேண்டும் அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்புடைய நிறுவனங்கள்தான் ஏலத்தில் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறீர்கள்.

சிறிய நிறுவனங்கள் பிராந்திய விமான நிலையங்களில் பணிபுரிந்திருப்பார்கள், அங்கு குறைந்த அளவில் திட்டமிடப்பட்ட விமானங்களின் வரத்து இருக்கும் அல்லது இல்லாமலோ இருக்கும், இதில் அவர்களின் அனுபவம் புறக்கணிக்கப்படுகிறது.

மத்திய அரசும், இந்திய விமான ஆணையமும் சிறு நிறுவனங்களை ஏலத்திலிருந்து வெளியேற்ற விரும்பினால், வெளிப்படையாக அவர்களுக்கு வாய்ப்பி்லலை என்று சொல்லுங்கள். இதுபோன்று போலித்தனமாகப் பேசாதீர்கள். இதுதான் உங்கள் கொள்கையாக இருந்தால், துணிச்சலாகச் சொல்லுங்கள்.

மேக் இன் இந்தியா, தற்சார்பு பொருளாதாரம் பற்றி பேசாதீர்கள். சிறிய நிறுவனங்களை ஏலத்தில் இருந்து வெளியேற்ற விரும்பும் உங்கள் செயல்பாடு எங்களுக்கு வேதனையளிக்கிறது.

சிறிய நிறுவனங்கள் வளர்வதற்கு அனுமதிக்காவிட்டால், சந்தையில் பெரு நிறுவனங்களின் ஆதிக்கம் மட்டுமே இருக்கும், அரசுக்கே அவர்கள் ஒரு கட்டத்தில் கட்டளையிடுவார்கள். இன்று நாம் தேசியவாதம் பற்றி பேசுகிறோம்,

இந்தியாவில்தான் தயாரிக்க வேண்டும் என்று கூறுகிறோம், இந்தியாவுக்காகச் சேவை செய்ய வேண்டும், தற்சார்பு பொருளாதாரமாக மாற வேண்டும் என பேசுகிறோம். அதற்கெல்லாம் என்ன நடந்து விட்டது. சூழலை இவ்வாறுதான் அனுகும் முறையா.

நம் மண்ணைச் சேர்ந்த சொந்த தொழில்முனைவோரை ஊக்குவிப்பதில் நாடு அலட்சியமாகவும் உணர்ச்சியற்றதாகவும் இருந்தது. இந்நாட்டில் உற்பத்தி செய்வதும் அல்லது கடை நடத்துவதும் கடினம் என்று கூறி மக்கள் வெளியேறிய பல சம்பவங்கள் இருக்கின்றன.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு, இந்திய விமான ஆணையத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தெரிவிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x