Published : 28 Aug 2020 01:09 PM
Last Updated : 28 Aug 2020 01:09 PM
கரோனா வைரஸ் பரவலைக் காரணமாகக் கருதி, பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலைத் தள்ளிவைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்று தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. இதுவரை 33 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 61 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பல்வேறு மாநிலங்களில் கரோனா தாக்கம் குறையவில்லை.
இந்நிலையில் பிஹார் மாநிலத்தின் சட்டப்பேரவைக் காலம் நவம்பர் மாதத்துடன் முடிகிறது. இதற்குள் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இதனால் அக்டோபர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிகிறது.
ஆனால், பிஹார் மாநிலத்தில் கரோனா தாக்கம் குறையாமல் இருந்து வருகிறது. அங்கு 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சூழலில் உச்ச நீதிமன்றத்தில் அவினாஷ் தாக்கூர் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், “கரோனா வைரஸ் காலத்தில் பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது மக்களின் உயிருக்கும், உடல்நலத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும். ஆதலால், பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலைத் தள்ளிவைக்க தேர்தல ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, அசாதாரண சூழல் நிலவும்போது தேர்தலைத் தள்ளிவைக்க இடம் உண்டு. ஆதலால், தேர்தலைத் தள்ளிவைக்க தலைமைத் தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்.
தேர்தல் என்பதற்கு மிக அதிகமான முக்கியத்துவம் தேவையில்லை. மனிதர்களின் உயிர்தான் அதிகமான முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தக் கரோனா வைரஸால் எம்எல்ஏக்கள் முதல் சாமானிய மக்கள் வரை பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்துள்ளார்கள்.
பிஹார் மாநிலத்தில் கரோனா வைரஸ் முற்றிலும் நீங்கும்வரை தேர்தலைத் தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஷோக் பூஷண், ஆர்.எஸ்.ரெட்டி, எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், மனுதாரர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞரை நோக்கி, “இன்னும் பிஹார் மாநிலத்தில் தேர்தல் நடத்தும் தேதி குறித்தே தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஏதும் செய்யாதபோது இந்த மனு இந்த நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? நாங்கள் எவ்வாறு தேர்தல் ஆணையத்துக்கு ஒரு மாநிலத்தில் தேர்தல் நடத்தாதீர்கள் என்று உத்தரவிட முடியும்?
ஒரு மாநிலத்தில் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கும், தள்ளி வைப்பதற்கும் கரோனா வைரஸ் பரவல் ஒரு காரணமாகக் கொள்ள முடியுமா? தேர்தல் ஆணையம் அனைத்து அம்சங்களையும் கருத்தில்கொண்டுதான் தேர்தலை நடத்தும்.
ஒரு மாநிலத்தில் தேர்தலை நடத்துவதா, தள்ளிவைப்பதா அல்லது ரத்து செய்வதா என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். இதில் நீதிமன்றம் தலையீட முடியாது. இந்த மனு மீது எந்தவிதமான உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது. அனைத்துச் சூழல்களையும் ஆய்வு செய்து தேர்தல் ஆணையம் நல்ல முடிவு எடுக்கும்” எனத் தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT