Published : 28 Aug 2020 08:23 AM
Last Updated : 28 Aug 2020 08:23 AM

எனக்கு உதவுங்கள் இல்லையேல் தற்கொலை செய்து கொள்வேன், ..: போரிஸ் ஜான்சனுக்கு மெயில் செய்த டெல்லி பெண்ணால் பரபரப்பு

டெல்லியில் வசிக்கும் 43 வயது பெண் ஒருவர் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அலுவலக மின்னஞ்சலுக்கு தான் மனம் உடைந்து போயிருப்பதாகவும் தனக்கு உதவவில்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மெயில் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த மெயில் உடனே பிரிட்டன் பிரதமர் அலுவலகத்திலிருந்து இந்திய தூதரகத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொள்ள வெளியுறவு அமைச்சகம் டெல்லி போலீசாருக்கு தெரிவிக்க டெல்லி போலீஸ் தலைமைச் செயலகமும் ரோஹிணி காவல் நிலைய போலீசாரும் இரவு 3 மணி நேரம் இந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து தற்கொலை முடிவைத் தடுக்கப் போராடியுள்ளனர்.

அந்தப் பெண்ணை போலீஸார் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அழைப்பை ஏற்கவில்லை. அவரது தொலைபேசி எண்ணை வைத்து அவரது முகவரியை தடம் கண்டு பிடிக்க முயன்றனர், ஆனால் 2 மணிநேரத்துக்குள் தனக்கு உதவவில்லை எனில் தற்கொலை செய்து கொள்வேன் என்று அந்தப் பெண் தெரிவித்திருந்ததால் நேரம் ஒரு முக்கியக் காரணியாக அமைந்தது.

அவரது மின்னஞ்சலில் கொடுக்கப்பட்ட முகவரி பூர்த்தியடையாமல் இருந்துள்ளது. ரோஹிணி பகுதியில் செக்டார் 21-ல் முகவரி தெரியாததால் சுமார் 40 வீடுகளை போலீஸார் சோதனை செய்தனர், அங்குள்ள குடியிருப்புவாசிகளையும் இதில் உதவக் கோரினர்.

கடைசியாக ஒரு வீட்டைக் கண்டுப்பிடித்தனர், அந்த வீட்டின் உரிமையாளர் கதவைத் திறக்க மறுத்துள்ளார், ஆனால் உள்ளேயிருந்து ஒரு பெண் ‘தயவு செய்து போய் விடுங்கள்’ என்று கத்தினார். பிறகு டெல்லி தீயணைப்பு வீரர்களை அழைத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே போனார்கள் போலீசார். அப்போது ஒரு பெண் ஹாலில் நின்று கொண்டிருந்தார். வீடு பூனைகளின் கழிவுகளினால் நாற்றம் அடித்துள்ளது. வீட்டுக்குள் சுமார் 16 பூனைகள் இருந்துள்ளன. போலீசாரை பார்த்தவுடன் அந்தப் பெண் அதிர்ச்சியடைந்து மன்னிப்புக் கேட்டுள்ளார்.

அந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதை போலீஸார் புரிந்து கொண்டனர், பெண் கான்ஸ்டபிளை அழைத்து அவரிடம் பேச வைத்த போது அந்தப்பெண் அழத்தொடங்கி விட்டார். விவாகரத்து பெற்று 10 ஆண்டுகளாக அவர் தனிமையில் வாழ்ந்து வருகிறார், பூனைகள்தான் அவரது உலகமாக இருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். டெல்லி முனிசிபாலிட்டி பள்ளியில் ஆசிரியையாக இருந்து 2-3 ஆண்டுகளுக்கு முன்பு வேலையை விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

போலீஸாரும் அவருக்கு உதவ மனநல மருத்துவர்களை அழைத்தனர், அந்தப் பெண்ணின் வீட்டை சுத்தம் செய்த உதவி அவரை குளிக்க வைத்து சாப்பிட வைத்துள்ளனர். போலீஸாரிடம் அவர், தான் பிரிட்டன் பிரதமருக்கு மெயில் அனுப்பக் காரணம் தன் கடன்களை அடைக்கவும், வீட்டு வாடகை உள்ளிட்ட செலவுகளைச் சமாளிக்கவும் உதவி கேட்டதாகத் தெரிவித்தார்.

இவ்வாறு போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x