Published : 28 Aug 2020 08:17 AM
Last Updated : 28 Aug 2020 08:17 AM
உத்தரபிரதேசத்தில் கணவர் தன்னிடம் சண்டையே போடுவதில்லை என்ற காரணத்துக்காக பெண் ஒருவர் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நாடு முழுவதும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகின்றன. கணவர் தன்னை அடித்து துன்புறுத்துகிறார்; மது அருந்துகிறார்; மற்றொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருக்கிறார் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் விவாகரத்து கோருவது வழக்கம்.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், அங்குள்ள ஷரியா நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால், இத்தனை நாட்களில் ஒருமுறை கூட அவர் என்னிடம் சண்டை போடவில்லை. வீட்டு வேலைகள் அனைத்திலும் எனக்கு உதவி செய்கிறார். எந்த விஷயத்திலும் அவர் இதுவரை என்னை வருத்தமடையச் செய்யவில்லை. அவர்காட்டும் அதிக அன்பு என்னை திணறடிக்கிறது. எல்லா விஷயங்களிலும் ஒத்துப்போகும் கணவன் எனக்கு தேவையில்லை. எனவே, எனக்கு அவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என கோரியிருந்தார்.
இதைப் பரிசீலித்த நீதிபதி, இந்த மனு மிக அற்பமாக இருப்பதாகக் கூறிவிசாரணைக்கு எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டார். இதனால் அதிருப்தியடைந்த அந்தப் பெண், தனது கிராமப் பஞ்சாயத்தாரிடம் இந்த விவாகரத்தை எடுத்துச் சென்றார். ஆனால், அவர்களும் இதை நிராகரித்துவிட்டனர்.
இதுகுறித்து அவரது கணவர் கூறும்போது, “எனது மனைவியை மிகவும் நேசிக்கிறேன். அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். எங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டாம்” என்றார்.
இந்நிலையில், தம்பதி தங்களுக்குள் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளுமாறு ஷரியா நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT