Published : 28 Aug 2020 08:15 AM
Last Updated : 28 Aug 2020 08:15 AM
தெலங்கானாவில் இளம்பெண் ஒருவர், தன்னை மிரட்டி 143 பேர்பாலியல் வன்கொடுமை செய்ததாக ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஹைதராபாத் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், செட்டிபல்லி கிராமத்தைச் சேர்ந்த 25வயது பெண் ஒருவர், ஹைதராபாத் பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 2009-ல் நான் மைனராக இருந்தபோதே எனக்கு ஹைதராபாத், மிரியாலகூடா பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருடன் எனது வீட்டார் திருமணம் செய்து வைத்தனர். பின்னர் எனது கணவர், மைத்துனர், மாமனார், மாமியார், நாத்தனார் ஆகியோர் உடல் ரீதியாகவும், மனதளவிலும் மிகவும் கொடுமைப்படுத்தினர். இதுகுறித்து நான் எனது தாயாரிடம் கூறி விவாகரத்து பெற்றேன். பின்னர் நான் விட்டுப்போன எனது படிப்பை தொடர்ந்தேன்.
அப்போது, என்னை மாணவர் சங்க நிர்வாகி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும் அதனை வீடியோ எடுத்து மிரட்டத் தொடங்கினார். இதையடுத்து அவரது நண்பர்கள், உறவினர்கள் என பலர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்.
பின்னர் முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள், தொலைக்காட்சி நடிகர்கள், தொழிலதிபர்கள், அவர்களின்நண்பர்கள் என பலரும் என்னைமிரட்டியே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர். கடந்த 11 ஆண்டுகளில் சுமார் 5,000 முறை நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளேன். இதில் 138பேரின் விவரங்களை வழங்கத்தயாராக உள்ளேன். 5 பேர்எனக்கு அடையாளம் தெரியாதவர்கள் ஆவர். இதன் புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகமிரட்டி, தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டனர். இவர்கள் தொடர்ந்து எனக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். ஆசைக்கு இணங்காவிட்டால் ஆசிட் ஊற்றி விடுவதாக மிரட்டுகின்றனர்.
இப்போது நான் புகார் அளிப்பதை அறிந்த சிலர் என்னை கொலை செய்யப்போவதாக மிரட்டுகின்றனர். அவர்களால் எனது உயிருக்கும் ஆபத்து உள்ளது. இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.
இப்புகார் மீது போலீஸார் நேற்று முன்தினம் 42 பக்க எஃப் ஐஆர் பதிவு செய்துள்ளனர். இதில் பெயர் விவரம் உள்ள 138 பேரில் பலருக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 6 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளதால் அந்தந்த மாநில போலீஸாரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.
இதனிடையே எஃப்ஐஆரில் இடம்பெற்றுள்ள பிரபலங்களின் பெயரை தற்போது வெளியிட முடியாது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT