Published : 28 Aug 2020 06:38 AM
Last Updated : 28 Aug 2020 06:38 AM
அருந்ததியினருக்கு உள்இடஒதுக் கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்றும் இவ் வாறு உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லும் எனவும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப் பளித்துள்ளது.
மேலும், எஸ்சி, எஸ்டி சமூகங் களை வகைப்படுத்துவது தொடர் பாக உச்ச நீதிமன்றம் கடந்த 2004-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பினை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பட்டிய லினப் பிரிவினருக்கு வழங்கப் படும் இடஒதுக்கீட்டில், அருந்ததி யினருக்கு 3 சதவீத உள்இடஒதுக் கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவு கடந்த 2009-ம் ஆண்டில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, 2011-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதே பிரச்சினை தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் இருந்தது. அதனால், கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சேலத்தைச் சேர்ந்த யசோதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மாற்றல் மனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி, இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதேபோல அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீட்டை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் இருந் தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு கள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் மீதான விசா ரணை, நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர் வில் நடந்துவந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, ‘‘பட்டியலினப் பிரிவினரில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல் உள்ள பிரிவினருக்கு இந்த இடஒதுக்கீடு பலன் அளிக்கும். எனவே, இதுதொடர்பாக மாநில அரசு கொண்டு வந்துள்ள சட்டம் அரசியலமைப்பு சட்டரீதியாக சரியானதுதான்’’ என வாதிட்டார். இந்த உள்இடஒதுக்கீடு மிகவும் பாதகமானது என வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி, வினீத் சரண், எம்.ஆர்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
பட்டியலினப் பிரிவினருக்கு வழங்கப்படும் 18 சதவீத இட ஒதுக்கீட்டில், அருந்ததியினருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி
மாநில அரசு கொண்டு வந் துள்ள சட்டம் செல்லும். இவ்வாறு பட்டியலினப் பிரிவினரில் பின்தங் கிய வகுப்பினரை முன்னேற்றும் வகையில் உள்இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது.
அதேநேரம் கடந்த 2005-ம் ஆண்டு இ.வி.சின்னையா வழக் கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித் துள்ள தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில், அந்த வழக் கில் இந்திரா ஷகானி என்பவரது வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை உச்ச நீதிமன்றம் முறையாக கருத்தில் கொள்ளவில்லை. எனவே, இந்த உள்ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இறுதி முடிவு எடுப்பதற்காகவும் விரிவாக விசாரிப்பதற்காகவும் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வகைப்படுத்த அதிகாரம்
ஆந்திராவில் எஸ்சி, எஸ்டி சமூகங்களில் உள்ள குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும், அதே சமூகங்களைச் சேர்ந்த ஒருசில பிரிவினர் முறையாக வகைப்படுத்தப்படாத காரணத்தால் அவர்களுக்கு இந்த சலுகை மறுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக, எஸ்சி, எஸ்டி பட்டியலில் உள்ள ஜாதிகளை 4 பிரிவுகளாக வகைப்படுத்தி இட ஒதுக்கீடு வழங்க ஆந்திர அரசு முடிவு செய்தது. இதற்காக சட்டம் ஒன்றையும் இயற்றியது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த 2004-ம் ஆண்டு விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, ‘எஸ்சி, எஸ்டி சமூகங்களை வகைப்படுத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை’ என தீர்ப்பு வழங்கியது.
இதனிடையே, இந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி பஞ்சாப் அரசு இயற்றிய ஒரு சட்டத்தை அம்மாநில உயர் நீதிமன்றம் அண்மையில் ரத்து செய்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கும் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், நீதிபதிகள் கூறியதாவது:
தங்கள் மாநிலங்களில் உள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கவும், தேவைப்பட்டால் சில சமூகங்களை வகைப்படுத்தவும் அந்தந்த மாநில அரசுகளுக்கு அதி காரம் உள்ளது. அப்படி இருக்கும் போது, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் 2004-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு முரணாக இருக்கிறது. எனவே, இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதற்கு ஏதுவாக, இந்த வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டியது அவசியம் என்பதால் இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பார்வைக்கு அனுப்பி வைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT