Published : 27 Aug 2020 10:02 PM
Last Updated : 27 Aug 2020 10:02 PM
கேரளாவில் இன்று 2,406 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் வியாழக் கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது:
''கேரளாவில் இன்று 2,406 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் திருவனந்தபுரம் மாவட்டத்தில்தான் மிக அதிகமாக 352 பேருக்கு நோய் பரவி உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக நோய் பாதிக்கப்பட்டவர்களில் 238 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 231 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 230 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 195 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 189 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 176 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 172 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 167 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 162 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 140 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 102 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 27 பேர் இடுக்கி மாவட்டத்தையும், 25 பேர் வயநாடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
கரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 10 பேர் மரணமடைந்தனர். இதையடுத்து இதுவரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 267 ஆக உயர்ந்துள்ளது.
இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 121 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும், 59 பேர் வெளிநாடுகளில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 2,175 பேருக்கு நோய் பரவி உள்ளது. இதில் 193 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது என்று தெரியவில்லை. இன்று சுகாதாரத் துறையைச் சேர்ந்த 47 பேருக்கு நோய் பரவி உள்ளது.
எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள 4 ஐ.என்.எச்.எஸ். ஊழியர்களுக்கும் நோய் பரவி உள்ளது. நோய் பாதித்து சிகிச்சையில் இருந்த 2,067 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 43,761 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 22,673 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் 1,93,925 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 1,75,513 பேர் வீடுகளிலும், 18,412 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று நோய் அறிகுறிகளுடன் 2,465 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 37,873 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. சிபிநாட், ட்ரூநாட் உள்பட இதுவரை மொத்தம் 15,64,783 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதுதவிரச் சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் உட்பட சமூக நெருக்கம் உள்ளவர்கள் 1,71,641 பேருக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இன்று நோய்த் தீவிரம் உள்ள பகுதிகளில் 13 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 14 பகுதிகள் இந்தப் பட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது கேரளாவில் 604 நோய்த் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன.
வெளிமாநிலங்களில் இருந்து பூக்களைக் கொண்டு வர தடை இல்லை
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளிமாநிலங்களில் இருந்து பூக்கள் கொண்டு வந்து விற்பனை செய்ய எந்தத் தடையும் இல்லை. ஆனால் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் 'கோவிட் 19 கேரளா ஜாக்ரதா' என்ற இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். பூ விற்பனை செய்பவர்கள் கரோனா நிபந்தனைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும். பூக்களை விற்பனை செய்தவுடன் கைகளைக் கழுவ வேண்டும். விற்பனை முடிந்த பின் பூக்கள் கொண்டு வரும் கூடைகளை எரித்துவிட வேண்டும். விற்பனை செய்யும்போது நெருக்கமாக நின்று கொண்டு விற்பனை செய்யக்கூடாது.
காருண்யா சுகாதாரத் திட்டத்தில் சேர்ந்துள்ள உறுப்பினர்களுக்குக் கேரளாவில் கரோனா சிகிச்சையை மாநில சுகாதார அமைப்புதான் இலவசமாக அளிக்கிறது. கரோனா கண்டுபிடிக்கப்பட்ட ஜனவரி 30-ம் தேதி ஆலப்புழாவில் மட்டும்தான் கரோனா பரிசோதனைக் கூடம் இருந்தது. ஆனால் தற்போது 19 அரசு பரிசோதனைக் கூடங்களும், 10 தனியார் பரிசோதனைக் கூடங்களும் உள்பட 24 இடங்களில் கரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.
தற்போது தினசரிப் பரிசோதனை 40 ஆயிரத்தைக் கடந்து விட்டது. புதன்கிழமை 40,352 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது கேரளாவில் நோயாளிகளின் எண்ணிக்கையும், மரண எண்ணிக்கையும் மிகவும் குறைவுதான். குறிப்பாக நமது அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் நோயாளிகள் மற்றும் மரண எண்ணிக்கை மிக அதிகமாகும்.
தமிழ்நாட்டில் இதுவரை கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அங்கு இதுவரை 7,000 பேர் மரணமடைந்துள்ளனர். கர்நாடகாவில் 10 லட்சத்தில் 82 பேரும், தமிழ்நாட்டில் 10 லட்சத்தில் 93 பேரும், கரோனா பாதித்து இறந்துள்ளனர். ஆனால் கேரளாவில் 10 லட்சத்தில் 8 பேர் மட்டுமே மரணமடைந்துள்ளனர். கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைப் போல இருந்தால் கேரளாவில் மரண எண்ணிக்கை இதற்குள் ஆயிரத்தைத் தாண்டி இருக்கும்.
மற்ற மாநிலங்களைவிடக் கேரளாவில் மக்கள் நெருக்கம் மிக அதிகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அது மட்டுமில்லாமல் வயதானவர்கள் எண்ணிக்கையின் இங்கு அதிகமாகும். இதேபோல சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகும். இவை அனைத்தும் இருந்தும் கேரளாவில் நோய்ப் பரவலை நாம் வெகுவாகக் கட்டுப்படுத்தி உள்ளோம். இதற்குச் சுகாதாரத் துறையின் சிறப்பான செயல்பாடும், மக்களின் ஒத்துழைப்பும்தான் முக்கியக் காரணமாகும்''.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT