Last Updated : 27 Aug, 2020 09:44 AM

 

Published : 27 Aug 2020 09:44 AM
Last Updated : 27 Aug 2020 09:44 AM

இன்று டெல்லியில் யுபிஎஸ்சியுடன் தமிழக தலைமை செயலாளர், டிஜிபி சந்திப்பு: குரூப்-1 அதிகாரிகளுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் அந்தஸ்து அளிக்க ஆலோசனை

புதுடெல்லி

தமிழகத்தின் குரூப்-1 அதிகாரிகளுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் அந்தஸ்திற்காக முடிவு செய்யும் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதற்காக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துடன்(யுபிஎஸ்சி) ஆலோசனை செய்ய தமிழக தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி ஜே.கே.திரிபாதி மற்றும் முதல் அமைச்சரின் செயலாளர் பி.செந்தில்குமார் விரைந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப்-1 தேர்ச்சி பெறுபவர்கள் மாநில நிர்வாகத்தின் பல்வேறு பிரிவுகள், காவல்துறை மற்றும் தீயணைப்பு படையின் டிஎஸ்பியாக பணி அமர்வது வழக்கம்.

இப்பணியில் 12 முதல் 18 வருடம் வரை பணியாற்றியவர்களுக்கு தமிழக அரசு, ஐஏஎஸ், ஐபிஎஸ் அந்தஸ்து அளிக்கிறது. இதற்காக, மத்திய அரசிற்கு அவ்வப்போது பரிந்துரைக்கும்.

இப்பரிந்துரை, அவர்களது அனுபவம் மற்றும் பணித்திறன் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அளிக்கப்படுகிறது. இதற்கு, மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறையினர் அனுமதியும் பெறப்படுகிறது.

இந்த அனுமதி, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு காரணமாக யுபிஎஸ்சியுடனும் பெற வேண்டி உள்ளது. தமிழக அரசில் காலியாகும் ஐஏஎஸ், ஐபிஎஸ் எண்ணிக்கையில் 33 சதவிகிதத்தை அந்தஸ்தாக அளிக்க யுபிஎஸ்சி ஒதுக்கும்.

இந்நிலையில், தமிழக அரசின் பரிந்துரைகள் மீது முடிவு செய்ய டெல்லியில் யுபிஎஸ்சி அலுவலகத்தில் அதன் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள தமிழக உயர் அதிகாரிகள் நேற்று மாலை விமானத்தில் டெல்லி வந்தனர்.

இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் குரூப்-1 தேர்வில் பெற்ற மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும். ஐஏஎஸ் பெற்றவர்களுக்கு உத்தராகண்ட் மாநில மசூரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆப் அட்மினிட்ரேஷனில் குறுகியக் காலப் பயிற்சி அளிக்கப்படும்.

அதன் பிறகு அவர்கள் தமிழகத்தின் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டப் பதவிகளில் அமர்த்தப்படுவார்கள். ஐபிஎஸ் அந்தஸ்து பெறும் டிஎஸ்பிக்களுக்கு ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் நேஷனல் போலீஸ் அகாடமியில் குறுகியக்காலப் பயிற்சி அளிக்கப்படும்.

இதுபோன்ற பரிந்துரையில் பெரும்பாலும் துணை ஆட்சியர்கள் இடம் பெறுகிறார்கள். பஞ்சாயத்துக்களின் துணை இயக்குநர்கள், துணைப்பதிவாளர்களாக கூட்டுறவு, பத்திரப்பதிவு மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு இயக்குநர் உள்ளிட்ட சில பதவிகளில் பணியாற்றுபவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த அந்தஸ்து, தமக்கு சாதகமானவர்களுக்கே மாநில அரசுகள் அளிப்பதாக புகார் எழும்புவது உண்டு. இந்த அந்தஸ்து பெற்றவர்களது நுழைவால், யுபிஎஸ்சி குடியுரிமை பணியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பெற்ற அதிகாரிகளுக்கு முக்கியப் பதவி கிடைக்கும் வாய்ப்புகளை இழப்பதும் உண்டு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x