Published : 26 Aug 2020 03:54 PM
Last Updated : 26 Aug 2020 03:54 PM
நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு நடத்தி மாணவ, மாணவியருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய முடியும், எனவே இதனை ஒத்தி வைக்க வேண்டும் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வான நீட் ஜூலை 26-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. எனினும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மீண்டும் நுழைவுத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.
நீட் தேர்வு, செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது. கரோனா காலத்திலும் தேர்வு திட்டமிட்ட தேதியில் கண்டிப்பாக நடைபெறும் என்று நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்குத் தேசிய அளவில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர். எனினும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீட் தேர்வை மீண்டும் ஒத்தி வைக்க வேண்டும் என பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக பாஜக ஆளாத மாநில முதல்வர்களின் கூட்டத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா கூட்டினார். காணொலி வாயிலாக நடந்த இந்தக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் காங்கிரஸ் ஆளும் 4 மாநிலங்களின் முதல்வர்களும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் நீட் தேர்வு மட்டுமின்றி, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
இந்தக்கூட்டத்தில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பேசுகையில் ‘‘அமெரிக்காவில் பள்ளிகள் திறந்ததால் 97 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலும் இதுபோன்ற சூழல் ஏற்பட வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறதா. அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் என்ன செய்ய முடியும். எனவே நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைப்பதை தவிர வேறு வழியில்லை. இதனை புரிந்து பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT