Published : 26 Aug 2020 02:31 PM
Last Updated : 26 Aug 2020 02:31 PM
நீட் தேர்வு, ஜிஎஸ்டி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கூட்டணி கட்சி ஆளும் மாநில முதல்வர்களின் கூட்டத்தை அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி கூட்டியுள்ளார்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வான நீட் ஜூலை 26-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. எனினும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மீண்டும் நுழைவுத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.
இந்நிலையில் நீட் தேர்வு, செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது. கரோனா காலத்திலும் தேர்வு திட்டமிட்ட தேதியில் கண்டிப்பாக நடைபெறும் என்று நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்குத் தேசிய அளவில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர். எனினும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நீட் தேர்வை மீண்டும் ஒத்தி வைக்க வேண்டும் என பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக பாஜக ஆளாத மாநில முதல்வர்களின் கூட்டத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா கூட்டுகிறார். இன்று பிற்பகலில் நடைபெறும் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் கூட்டணிக் கட்சிகள் ஆளு் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்களும் பங்கேற்கவுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் நீட் தேர்வு மட்டுமின்றி, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடர்பாகவும் விவாதிக்கப்படவுள்ளது. இந்த கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் அதில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்தும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி விவாதிக்கவுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT