Published : 26 Aug 2020 07:45 AM
Last Updated : 26 Aug 2020 07:45 AM
கர்நாடக மாநிலத்தில் 5 மாதத்துக்கு பின் கரோனா பரவலைதடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கரோனாவைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 2.85 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை 4,810 பேர் பலியாகியுள்ளனர். கரோனா பரவல் அதிகரித்தாலும் மற்ற மாநிலங்களை போல கர்நாடகாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படவில்லை. இந்நிலையில் மத்திய அரசு ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு பயணிப்பதற்கும், மாநிலத்துக்கு உள்ளே பயணிப்பதற்கும் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என அறிவித்தது.
இதையடுத்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ஜாவேத் அக்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கர்நாடக மாநிலத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் விதிக்கப்பட்ட அனைத்து போக்குவரத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகின்றன. இனி வெளி மாநிலங்களில் இருந்து கர்நாடக மாநிலத்துக்குள் வருவதற்கு இ பாஸ் தேவையில்லை. கர்நாடகஅரசின் சேவா சிந்து இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டியதும் இல்லை. அதேபோல் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதும் இல்லை. எனவே வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு இனி கைகளில் சீல் வைக்கப்படாது.
கர்நாடக மாநில எல்லைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ பரிசோதனை முகாம்கள் நீக்கப்படுகின்றன. இனி கர்நாடகாவுக்கு சாலை மார்க்கமாகவும், விமானம், ரயில் மூலமாகவும் வருவதற்கு எந்த தடையும் இல்லை. மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ பாஸ் பெற வேண்டிய அவசியமும் இல்லை.
கரோனா வைரஸ் தொற்று அறிகுறி தங்களுக்கு இருந்தால் அதுதொடர்பாக, அரசுக்கு பயணிகள் தகவல் தெரிவிக்க வேண்டும்.கரோனா அறிகுறி இருப்பவர்கள் அரசின் உதவி மையத்தை 14410என்ற தொலைபேசி எண்ணில்தொடர்பு கொண்டு விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
அதே வேளையில் அனைவரும் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி சோப்பைக் கொண்டு கைகழுவதுடன், சானிடைசர் பயன்படுத்தவேண்டும்'' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டி.கே.சிவகுமாருக்கு கரோனா
கரோனா தொற்றுக்கு ஆளான முதல்வர் எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் முழுவதுமாக குணமடைந்துள்ளனர். 35-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களும், 5 எம்.பி.க்களும் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் கர்நாடகமாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்பெங்களூருவில் உள்ள தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT