Published : 25 Aug 2020 08:28 PM
Last Updated : 25 Aug 2020 08:28 PM

சிவில் சர்வீஸ் தேர்வு; ஹரியாணா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றது புதிய அதிசய நிகழ்வு: ஜிதேந்திர சிங் பாராட்டு

புதுடெல்லி

ஹரியாணா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றிருப்பது ஒப்பீட்டு அளவில் புதிய அதிசய நிகழ்வு என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.

வடகிழக்குப் பிராந்திய மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளித்துறை மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று டெல்லியில், அண்மையில் வெளியிடப்பட்ட 2019 ஐஏஎஸ்/ சிவில் தேர்வுகளில் அகில இந்திய அளவில் உயர் இடம் பிடித்து வெற்றி பெற்றவர்களுடன் கலந்துரையாடினார்.

இதில், அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்த ஹரியாணாவைச் சேர்ந்த பிரதீப் சிங், இரண்டாம் இடம் பிடித்த தில்லியைச் சேர்ந்த ஜதின் கிஷோர், மூன்றாம் இடத்தில் வெற்றி பெற்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரதீபா வர்மா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்தக் கலந்துரையாடலின் போது, கடந்த ஐந்து ஆண்டுகளாக, மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையில் புதிய வழக்கத்தை தாம் அறிமுகப்படுத்தியதாக டாக்டர்.ஜித்தேந்திர சிங் கூறினார். அகில இந்திய அளவில் முன்னணி இடங்களைப் பிடித்தவர்களை பணியாளர் நலத்துறைத் தலைமையகத்துக்கு நேரடியாக அழைத்துப் பாராட்டுவதுடன், அவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வந்தவதாக அவர் கூறினார். நோய்த்தொற்று பரவல் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த ஆண்டு அதே வடிவில் நிகழ்ச்சி நடைபெற முடியாமல் போனது. இதனால், இந்த நிகழ்ச்சி காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது.

பல்வேறு பகுதிகளில் இருந்து முதலிடங்களைப் பிடித்தவர்கள் அவரக்ளது சொந்த இடங்களிலிருந்து கலந்து கொண்டனர். தொற்றுப்பரவல் நேரத்தில் எந்த ஒரு வேலையும் தடைபடக்கூடாது என்ற மோடி அரசின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளதாக பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையை ஜித்தேந்திர சிங் பாராட்டினார். இன்றைய கூட்டமும் இதற்கு எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாக, இத்தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களை வைத்துப் பார்க்கும் போது, மக்கள்தொகை ரீதியில் மாற்றம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக டாக்டர்.ஜித்தேந்திர சிங் குறிப்பிட்டார். பத்தாண்டுகளுக்கு முன்பு, அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுபவர்கள் தொடர்ந்து இந்தியாவின் குறிப்பிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் என்று கூறிய அவர், இன்று ஹரியாணா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றிருப்பது ஒப்பீட்டு அளவில் புதிய அதிசய நிகழ்வு என்று கூறினார். இதுபோல, ஒவ்வொரு வருடமும் முதல் மூன்று இடம் பிடித்தவர்களில், பெண்கள் இடம் பிடிப்பது வாடிக்கை என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டு முதலிடம் பிடித்த 25 பேரில் 12 பேர் பொறியாளர்கள் என்பதை டாக்டர்.ஜித்தேந்திர சிங் சுட்டிக்காட்டினார். இது, அவர்களுக்கு ஒதுக்கப்படும் மோடி அரசின் சிறப்புத் திட்டங்களில் மதிப்பு மிக்கப் பணியை மேற்கொள்ள உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x