Published : 25 Aug 2020 04:41 PM
Last Updated : 25 Aug 2020 04:41 PM
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முதல்வர் பிஎஸ்.எடியூரப்பா, முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து குணமடைந்துள்ள நிலையில் சிவகுமார் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “எனக்குக் காய்ச்சலும், இருமலும் லேசாக இருந்தது. இதையடுத்து, கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் எனக்குத் தொற்று இருப்பது உறுதியானது. தற்போது நான் நலமுடன் இருக்கிறேன். இருப்பினும், மருத்துவர்கள் அறிவுரைப்படி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னை மருத்துவர்கள் நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள்.
உங்கள் வாழ்த்துகள், ஆசிகளுடன் விரைவில் குணமடைந்து திரும்புவேன். என்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
58 வயதான டி.கே. சிவகுமார் பெங்களூருவில் உள்ள ராஜாஜி நகரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். திங்கள்கிழமை காலையிலிருந்தே லேசான காய்ச்சலும், இருமலும், முதுகுவலியும் சிவகுமாருக்கு இருந்தது. உடனடியாகக் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்குத் தொற்று இருப்பது உறுதியானது என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிவகுமாருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெலகாவி, பாகல்கோட் மாவட்டங்களைப் பார்வையிடுவதாக இருந்த அவரின் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
டி.கே. சிவகுமார் விரைவாக குணமடைய காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர்கள், சித்தராமையா, ஹெச்டி குமாரசாமி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
சித்தராமையா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “என்னுடைய நண்பரும், காங்கிரஸ் மாநிலத் தலைவருமான டி.கே.சிவகுமார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்தேன். விரைவாக அவர் நலம் பெற்று, மக்கள் சேவைக்குத் திரும்ப வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT