Last Updated : 25 Aug, 2020 12:38 PM

2  

Published : 25 Aug 2020 12:38 PM
Last Updated : 25 Aug 2020 12:38 PM

‘அதிருப்தி இல்லாவிட்டால் மாற்றம் நடக்கவே நடக்காது; அலை இருப்பதால்தானே கடல்’- காங். பிரச்சினை குறித்து ப.சிதம்பரம் கருத்து

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்: கோப்புப் படம்.

புதுடெல்லி

அதிருப்தி இல்லாவிட்டால் மாற்றம் நடக்கவே நடக்காது. இதுபோன்ற அதிருப்திகளால் மாற்றம் ஏற்பட்டு, கட்சி இனிமேல் வலிமையடையும். இன்னும் சு றுசுறுப்பாகச் செயல்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஓராண்டுக்கும் மேலாக இடைக்காலத் தலைவர் தொடர்வது கட்சிக்குள் நிலையான தலைமை கோருபவர்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது.

இது தொடர்பாக சோனியா காந்திக்கு மூத்த தலைவர் 23 பேர் கடிதம் எழுதி தலைமை குறித்து உறுதியான முடிவு எடுக்க வலியுறுத்தியுள்ளனர். மீண்டும் ராகுல் காந்தி தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று சிலரும், அடிப்படை மாற்றங்கள் தேவை எனவும் இரு தரப்பிலும் கோரிக்கை வலுத்து வருகிறது.

இதையடுத்து, நேற்று காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் நடந்தது. 7 மணிநேரம் நீண்ட விவாதங்கள் நடந்தபின், இடைக்காலத் தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார் என்றும், சோனியா- ராகுல் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தி்ல ப.சிதம்பரமும் பங்கேற்றார். அந்தக் கூட்டம் முடிந்தபின் அங்கு நடந்த சலசலப்பு குறித்து மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஏஎன்ஐ நிருபருக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதிய மூத்த தலைவர்கள் அனைவரும் கட்சியின் நிலை குறித்துக் கவலை தெரிவித்துதான் கடிதம் எழுதினார்கள். பாஜகவைத் தீவிரமாக எதிர்த்துவரும் ராகுல் காந்தியைப் போல், என்னைப் போல், கடிதம் எழுதிய தலைவர்களும் தீவிரமாக எதிர்த்து வருகின்றனர்.

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த ஒவ்வொருவரும் தங்கள் மனதில் இருக்கும் விஷயங்களைப் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

பாஜகவுடன் கூட்டு வைத்திருப்பதாக ராகுல் காந்தி யாரையும் சொல்லவில்லை. யாரும் ராகுல் காந்திக்குக் குறைந்தவர்களும் இல்லை. ஆனால், ராகுல் காந்தி குற்றம்சாட்டிப் பேசியதாக சில ஊடகங்கள் திரித்து வெளியிட்டுவிட்டன.

காங்கிரஸில் உள்ள மூத்த தலைவர்கள் தங்கள் மனதில் இருக்கும் கவலைகளைத் தெரிவித்தார்கள், அவர்களின் குறைகள் அடையாளம் காணப்பட்டன. அங்கு எப்போதுமே அதிருப்தி இருக்கிறது.
உண்மையில், சில அதிருப்திகள் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன. அதிருப்தி இல்லாவிட்டால், மாற்றம் என்ற ஒன்று நடக்கவே நடக்காது.

காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கள் குறைகளைச் சொன்னார்கள், அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதற்கான தீர்வும் காணப்பட்டிருக்கிறது.

மிக விரைவாக காங்கிரஸ் கட்சிக்கு முழுநேரத் தலைவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அமைப்பு ரீதியான மாற்றங்களைக் கொண்டுவர விதிகளில் திருத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

ஒரு அரசியல் கட்சி உயிர்ப்புடன் இருக்கிறது என்றால், அங்கு கேள்விகள், அதிருப்திகள் இருக்கத்தான் செய்யும். அவை கட்சியை முன்னோக்கி நகர்த்திச் சென்று, இன்னும் வீரியமாகச் செயல்பட வைக்கும்.
எல்லாம் நன்றாக இருக்கிறது, நன்றாகச் செல்கிறது என்று ஒருபோதும் சொல்வதில்லை. கடலில் உள்ள அலைகள் எப்போதாவது அமைதியாக இருந்து நீங்கள் கண்டதுண்டா?

அலைகள் தொடர்ந்து வருவதால்தான் நாம் அதைக் கடல் என்று அழைக்கிறோம். இல்லாவிட்டால் உயிரற்ற கடல் என்று கூறுவோம். ஆதலால், கேள்விகள், அதிருப்திகள் கட்சிக்குள் எப்போதும் இருக்க வேண்டும்.
செயற்குழுக் கூட்டத்தில் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்கிறோம். இது கட்சியை முன்னோக்கி நகர்த்திச் சென்று, இன்னும் வீரியமாகச் செயல்பட வைக்கும்''.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x