Published : 25 Aug 2020 08:21 AM
Last Updated : 25 Aug 2020 08:21 AM
உத்தரபிரதேசத்தின் மேற்கு பகுதியிலுள்ள மீரட் குற்ற நடவடிக்கைகளுக்கு பெயர் போனது. டெல்லிக்கு அருகிலுள்ள நகரமான இதன் கஜ்ரவுலா பகுதியில் என்சிஇஆர்டி பாடநூல்கள் அனுமதியின்றி சட்டவிரோதமாக அச்சடிக்கப்படுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதை அறிந்த உ.பி. சிறப்பு அதிரடிப்படையினர் (எஸ்டிஎப்) நேற்று முன்தினம் இரவு கஜ்ரவுலாவில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ரூ.25 கோடி மதிப்புள்ள நவீன அச்சு இயந்திரங்களில் என்சிஇஆர்டி பள்ளிப் பாடநூல்கள் அச்சடிப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அங்குள்ள இயந்திரங்கள் மற்றும் ரூ.34 கோடி மதிப்புள்ள பாடநூல்கள் எஸ்டிஎப்அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. மீரட்டின் அருகிலுள்ள மாவட்டமான அம்ரோஹாவில் இருந்தஅதன்சேமிப்புக் கிடங்கில் அச்சடிக்கப்பட்ட நூல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் முக்கிய குற்றவாளியான சஞ்சீவ் குப்தாவையும்அவரது உறவினரான சச்சின் குப்தாவையும் எஸ்டிஎப் தீவிரமாக தேடி வருகிறது. இதில் சஞ்சீவ் குப்தா பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர் ஆவார். அச்சகத்தின் பணியில் இருந்த 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து எஸ்டிஎப் அதிகாரிகள் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, "கடந்த 7 வருடங்களாக என்சிஇஆர்டி நூல்களை அச்சடித்து விநியோகித்து வந்துள்ளனர். இதற்காக நாடு முழுவதிலும் போலியாக தட்டுப்பாடு சூழலை உருவாக்கி லாபம் பார்த்துள்ளனர். இதில் அரசு மற்றும் காவல் துறைக்கும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரித்து வருகிறோம்" என்றனர்.
என்சிஇஆர்டியால் அச்சடிக்கப்பட்ட நூல்கள் என்பதைக் குறிக்கும் வகையில், ‘வாட்டர்மார்க்’ என்றழைக்கப்படும் அச்சுக் குறியீடுநூலின் ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கும். இதுவும் மீரட்டில் அச்சடிக்கப்பட்ட நூல்களில் தெளிவாக இடம் பெற்றுள்ளது. இந்நூல்கள் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இவை சென்னைமற்றும் மதுரையில் உள்ள சிலபாடநூல் விநியோகஸ்தர்கள் மூலமாக விற்பனை நடந்து வந்துள்ளது. இந்த விற்பனைக்கான ரசீதுஅளிக்கப்படாமல் பல கோடிஜிஎஸ்டி வரி ஏய்ப்பும் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த எஸ்டிஎப் படையினர் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் செல்ல உள்ளனர்.
இதேபோல, கடந்த வருடம் பஞ்சாபின் சண்டிகரிலும் போலிஎன்சிஇஆர்டி நூல்கள் விற்பனைசெய்யப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டது. அதன் விசாரணையில் இதன் தொடர்புகள் உத்தரபிரதேச மாநிலத்தில் இருப்பதும் தெரிந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT