Published : 25 Aug 2020 07:47 AM
Last Updated : 25 Aug 2020 07:47 AM
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி நேற்று கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது.
கேரளாவில் சமீபத்தில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ள தங்கம் கடத்தல் வழக்கில் பினராயி விஜயன் தலைமையிலான அரசைக் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது.
முதல்வர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளருக்குத் தங்கம் கடத்தலில் தொடர்பு இருப்பதால், முதல்வர் பினராயி விஜயனிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா வலியுறுத்தி வருகிறார்.
இது தவிர கரோனா விவகாரத்தைக் கையாளும் விதம், ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளும் இடது ஜனநாயக முன்னணி மீது காங்கிரஸ் கட்சி வைத்தது.
இதையடுத்து கேரளாவில் நேற்று ஒரு நாள் மட்டும் சட்டப்பேரவை கூடியது. இதில் பட்ஜெட்டுக்கான நிதி மசோதா முதலில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அந்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரியும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏ சதீஸன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தாக்கல் செய்து பேசினார். அதைத் தொடர்ந்து ஆளும் கட்சி சார்பில் பல்வேறு எம்எல்ஏக்கள், அமைச்சர்களும், எதிர்க்கட்சித் தரப்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பேசினர். ஏறக்குறைய நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது 9 மணி நேரம் விவாதம் நடந்தது.
இதைத் தொடர்ந்து, இரவு 9 மணிக்கு மேல், நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. கரோனா வைரஸ் பரவலால் எம்எல்ஏக்கள் சமூக விலகலைக் கடைப்பிடித்தபோதிலும் பாரம்பரிய முறைப்படியே வாக்கெடுப்பு நடந்தது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவாக இருக்கும் இருக்கும் எம்எல்ஏக்களை எழுந்து நிற்கக் கோரி பேரவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். அதன்படி நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக 40 எம்எல்ஏக்கள் மட்டுமே வாக்களித்தனர்.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக 87 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இதையடுத்து, நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்ததாகப் பேரவைத் தலைவர் அறிவித்தார்.
கேரள சட்டப்பேரவையில் மொத்தம் 140 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 93 உறுப்பினர்கள் ஆளும் கட்சி சார்பிலும், 45 பேர் காங்கிரஸ் கட்சியிலும், பாஜகவுக்கு ஒரு உறுப்பினரும், ஒரு சுயேச்சை உறுப்பினரும் உள்ளனர். இரு எம்எல்ஏக்கள் இறந்ததால், அந்த இடம் காலியாக இருக்கிறது.
அச்சுதானந்தன், அமைச்சர் கேடி ஜலீல், ஜார்ஜ் எம் தாமஸ் ஆகியோர் ஆளும் கட்சி சார்பில் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
எல்டோஸ் குன்னப்பள்ளி, சிஎப் தாமஸ், ரோஷி அகஸ்டின், என்.ஜெயராஜ் ஆகியோர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. பாஜக எம்எல்ஏ ராஜகோபாலும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
இதில் இடதுசாரி கூட்டணியில் உள்ள எம்எல்ஏக்கள் காரத் ரஸாக், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கே.எம். ஷாஜி ஆகியோருக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் தொடர்பாக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், வாக்களிக்கவில்லை.
கடந்த 15 ஆண்டுகளுக்குப் பின் கேரள சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 2005-ம் ஆண்டு உம்மன் சாண்டி அரசுக்கு எதிராக கொடியேறி பாலகிருஷ்ணன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT