Published : 24 Aug 2020 02:26 PM
Last Updated : 24 Aug 2020 02:26 PM
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் பாஜகவுடன் சேர்ந்து செயல்படுவதாக
ராகுல் காந்தி குற்றம்சாட்டியதாக தகவல் வெளியான நிலையில் அதனை அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜே வாலா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியைக் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தபின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியிலிருந்து தற்போதுவரை ஓராண்டுக்கும் மேலாக இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தொடர்வது கட்சிக்குள் நிலையான தலைமை கோருபவர்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது.
இது தொடர்பாக சோனியா காந்திக்கு மூத்த தலைவர்கள் 24 பேர் கடிதம் எழுதி தலைமை குறித்து உறுதியான முடிவு எடுக்க வலியுறுத்தியுள்ளனர். குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல், முகுல் வாஸ்னிக், மணிஷ் திவாரி, சசி தரூர், ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபேந்திரசிங் ஹூடா ஆகியோர் காங்கிரஸ் தலைமையில் மறுமலர்ச்சி, புத்துணர்ச்சி தேவை, முழுநேரத் தலைமை அவசியம் எனக் கோருகின்றனர்.
இந்நிலையில் தலைமை குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று காணொலி மூலம் கூடியது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, தான் இடைக்காலத் தலைவர் பதிவியிலிருந்து விலகுவதாக விருப்பம் தெரிவித்து பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு விளக்கமாகப் பதில் அளித்து கடிதம் அளித்துள்ளார் என்றும், புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணியைத் தொடங்குங்கள், தன்னைத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கும்படியும் கேட்டுக்கொண்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் சோனியா காந்தியே தலைவர் பதவியில் தொடர வேண்டும் என்று மன்மோகன்சிங் கேட்டுக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் சோனியா காந்திக்கு எதிராகக் கடிதம் எழுதிய தலைவர்களை மன்மோகன் சிங்கும், மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனியும் கடுமையாக விமர்சித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய ராகுல் காந்தி, சோனியா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தபோது அவருக்கு மூத்த தலைவர்கள் ஏன் கடிதம் அனுப்பினார்கள் என்றும், மூத்த தலைவர்கள் சிலர் பாஜகவுடன் சேர்ந்து செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தியின் இந்த திடீர் குற்றச்சாட்டால் மூத்த தலைவர்கள் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நாங்கள் பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறோமா என அடுக்கடுக்காக ராகுல் காந்திக்கு ட்விட்டரில் கபில் சிபல் கேள்வி எழுப்பினார்.
Sh. Rahul Gandhi hasn’t said a word of this nature nor alluded to it.
Pl don’t be mislead by false media discourse or misinformation being spread.
But yes, we all need to work together in fighting the draconian Modi rule rather then fighting & hurting each other & the Congress. https://t.co/x6FvPpe7I1— Randeep Singh Surjewala (@rssurjewala) August 24, 2020
இந்தநிலையில் கபில் சிபலின் ட்வீட்டை டேக் செய்து சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இதேபோன்ற கருத்தில் எந்த வார்த்தையும் சொல்லவில்லை அதுபோன்று எதுவும் குறிப்பிடவில்லை. ஊடகங்கள் தவறான செய்தி வெளியிட வேண்டாம், தவறான தகவல் பரப்பப்பட வேண்டாம். நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய நேரமிது. மோடி அரசின் கடுமையான ஆட்சியை எதிர்த்து நாம் செயல்படுவதை விடுத்து நமக்கும் சண்டையிட வேண்டாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT