Published : 24 Aug 2020 01:54 PM
Last Updated : 24 Aug 2020 01:54 PM
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் பாஜகவுடன் சேர்ந்து செயல்படுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்த நிலையில் இந்த விவகாரம் அந்த கட்சியில் பெரும் மோதலை தொடங்கியுள்ளது. ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டை நிருபித்தால் ராஜினாமா செய்வேன் என மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியைக் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தபின், தலைவர் இல்லாமல் சில மாதங்கள் கட்சி சென்றது. அதன்பின் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியிலிருந்து தற்போதுவரை ஓராண்டுக்கும் மேலாக இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தொடர்வது கட்சிக்குள் நிலையான தலைமை கோருபவர்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது.
இது தொடர்பாக சோனியா காந்திக்கு மூத்த தலைவர்கள் 24 பேர் கடிதம் எழுதி தலைமை குறித்து உறுதியான முடிவு எடுக்க வலியுறுத்தியுள்ளனர். குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல், முகுல் வாஸ்னிக், மணிஷ் திவாரி, சசி தரூர், ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபேந்திரசிங் ஹூடா ஆகியோர் காங்கிரஸ் தலைமையில் மறுமலர்ச்சி, புத்துணர்ச்சி தேவை, முழுநேரத் தலைமை அவசியம் எனக் கோருகின்றனர்.
பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அஸ்வானி குமார், சல்மான் குர்ஷித் ஆகியோர் காந்தி குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
இந்நிலையில் தலைமை குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று காணொலி மூலம் கூடியது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனி, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, தான் இடைக்காலத் தலைவர் பதிவியிலிருந்து விலகுவதாக விருப்பம் தெரிவித்து பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு விளக்கமாகப் பதில் அளித்து கடிதம் அளித்துள்ளார் என்றும், புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணியைத் தொடங்குங்கள், தன்னைத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கும்படியும் கேட்டுக்கொண்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால்,சோனியா காந்தியே தலைவர் பதவியில் தொடர வேண்டும் என்று மன்மோகன்சிங் கேட்டுக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் சோனியா காந்திக்கு எதிராகக் கடிதம் எழுதிய தலைவர்களை மன்மோகன் சிங்கும், மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனியும் கடுமையாக விமர்சித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய ராகுல் காந்தி, சோனியா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தபோது அவருக்கு மூத்த தலைவர்கள் ஏன் கடிதம் அனுப்பினார்கள் என்றும், மூத்த தலைவர்கள் சிலர் பாஜகவுடன் சேர்ந்து செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தியின் இந்த திடீர் குற்றச்சாட்டால் மூத்த தலைவர்கள் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‘‘நாங்கள் பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறோம் என ராகுல் காந்தி கூறுகிறார்.ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வெற்றி பெற்றதால் அங்கு காங்கிரஸ் கட்சியை பாதுகாத்தது.மணிப்பூரில் பாஜக அரசை வீழ்த்தும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியை பாதுகாத்தது.
30 ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவாக எந்த ஒரு அறிக்கையும் வெளியிடாதது.நாங்கள் பாஜகவுடன் இணைந்து செயல்டுகிறோமா?’’என கபில் சிபல் கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து மற்றொரு மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் காரியக்கமிட்டிக் கூட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அந்த கூட்டத்தில் பேசிய குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டை நிருபித்தால் தான் ராஜினாமா செய்யவேன் என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT