Published : 24 Aug 2020 11:02 AM
Last Updated : 24 Aug 2020 11:02 AM
காங்கிரஸ் கட்சிக்குள் நிரந்தரமான தலைவர் கோரி ஒருதரப்பினரும், சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு ஆதரவாக ஒருதரப்பினரும் குரல் எழுப்பி உட்கட்சி சிக்கல் தீவிரமடைந்துள்ள நிலையில், இதனை பாஜக விமர்சித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தபின், தலைவர் இல்லாமல் சில மாதங்கள் சென்றன. அதன்பின் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியிலிருந்து தற்போதுவரை ஓராண்டுக்கும் மேலாக இடைக்காலத் தலைவர் தொடர்வது கட்சிக்குள் நிலையான தலைமை கோருபவர்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது.
இது தொடர்பாக சோனியா காந்திக்கு மூத்த தலைவர் 24 பேர் கடிதம் எழுதி தலைமை குறித்து உறுதியான முடிவு எடுக்க வலியுறுத்தியுள்ளனர். ஆனால், சோனியா காந்திக்கு எதிர்ப்புத் தெரிவித்த தலைவர்களை ஒரு தரப்பினர் கடுமையாக எதிர்க்கின்றனர்.
கட்சிக்கு மீண்டும் ராகுல் காந்தி தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று சிலரும், அடிப்படை மாற்றங்கள் தேவை எனவும் இரு தரப்பிலும் கோரிக்கை வலுத்து வருகிறது.
இதுகுறித்து ஆலோசிக்க காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக்கூட்டம் இன்று கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் எனத் தெரிகிறது.
இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியின் நிலை குறித்து பாஜக விமர்சித்துள்ளது. பாஜகவின் பொதுச்செயலாளர் முரளிதர ராவ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “காங்கிரஸ் கட்சி அமைப்பு ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் இலக்கில்லாமல் பயணிக்கிறது. இந்தியாவின் நலன்கள், இலக்குகள் இல்லை என்று நீண்டகாலத்துக்கு முன்பே இதை பாஜக கூறியது.
இந்தியர்கள் இப்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியின் நிலையைப் பார்க்கிறார்கள். இப்போது காங்கிரஸ் கட்சியின் 24 முக்கியத் தலைவர்களும் எங்களுடைய கருத்தைத்தான் ஏற்றுக்கொண்டு கடிதம் எழுதியுள்ளனர். எதற்குமே பாதித் தீர்வுகள் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா ட்விட்டரில் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் சிலர் கட்சியின் அடிமட்டத்திலிருந்து, தலைமை வரை ஒட்டுமொத்த மாற்றம் கோரியுள்ளார்கள். காங்கிரஸில் முரண்பாடாக, இப்போது தலைமைதான் கீழே இருக்கிறது” என விமர்சித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT